অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மனித இரையகக் குடற்பாதை

மனித இரையகக் குடற்பாதை

மனித இரையகக் குடற்பாதை என்பது, மனிதரின் வயிறு, குடல் என்பவற்றை ஒருசேரக் குறிக்கும். சில வேளைகளில் வாயில் இருந்து மலவாசல் வரையான எல்லா அமைப்புக்களையும் இச்சொல் குறிப்பதுண்டு.

வளர்ந்த உயிருள்ள மனித ஆணில் இரையகக் குடற்பாதை 5 மீட்டர் (16 அடிகள்) வரை நீளமுள்ளதாகவும், தசை முறுக்கு இல்லாதவிடத்து இந்த நீளம் 9 மீட்டர் (30 அடிகள்) வரையும் இருக்கும். இது குடற்பாதையின் மேல், கீழ் பகுதிகளையும் உள்ளடக்கும். குடற்பாதையின் ஒவ்வொரு பகுதியினதும் கருவியல் தோற்றத்தைக் குறிக்கும் வகையில் இப்பாதையை முன்குடல், நடுக்குடல், பின்குடல் எனப் பிரிப்பது உண்டு.

உணவுச் சுவடு மூலம் உணவு சிக்கலான நிலையிலிருந்து எளிய நிலைக்கு மாற்றப்படுகின்றது. இரையகக் குடற்பாதையில் இரைப்பை கடைவதன் மூலமும், சிறுகுடலில் பித்த உப்புக்களின் செயற்பாட்டால் கொழுப்பு குழம்பாக்கப்படுவதன் மூலமும் பொறிமுறைச் சமிபாடு நிகழ்கின்றது. உணவுச் சுவட்டினால் சுரக்கப்படும் நீர்ப்பகுப்பு நொதியங்களினால் இரசாயன ரீதியாக உணவு எளிய வடிவுக்கு மாற்றப்படுகின்றது.

சமிபாட்டுச் செயல்பாட்டை ஒழுங்கமைப்பதற்காக, இரையகக் குடற்பாதை எப்பொழுதும் ஹார்மோன்களைச் சுரந்தபடி இருக்கும். காசுட்ரின் (gastrin), செக்ரிட்டின் (secretin), கொலெக்கிசுட்டொக்கினின் (cholecystokinin), கிரேலின் (Ghrelin) போன்றவற்றை உள்ளடக்கிய ஹார்மோன் உட்சுரப்பு அல்லது தன்சுரப்பு முறைமூலம் செலுத்தப்படுகின்றன.

மேல் இரையகக் குடற்பாதை

மேல் இரையகக் குடற்பாதை என்பது களம், இரைப்பை, முன்சிறுகுடல் என்பவற்றை உள்ளடக்கியதாகும்

கீழ் இரையகக் குடற்பாதை

கீழ் இரையகக் குடற்பாதை என்பது பெரும்பாலான சிறுகுடலின் பாகங்களையும் பெருங்குடலையும் உள்ளடக்கும்.

குடல்

குடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பையின் பக்கத்தில் அமைந்துள்ளது. குடல் மனித உள்ளுருப்புகளில் முக்கியமானது அகும். குடல் சிறுகுடல், பெருங்குடல் என்று இருவகைப்படும்.

சிறுகுடல்

இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பகுதிகளாக உள்ளது. இங்குதான் பெரும்பாலான சமிபாடு நிகழ்கிறது. சிறுகுடலின் உட் சுவரிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் விரலிகள் என்னும் அமைப்புக்கள் ஊட்டப் பொருள்களை உறிஞ்சி குருதிக்குள் அனுப்புகின்றன. ஐந்து வயதுக்கு மேற்பட்ட மனிதரில் சிறுகுடலின் நீளம் 4 மீட்டருக்கும் 7 மீட்டருக்கும் இடையில் காணப்படும். சிறுகுடலின் பகுதிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்:

முன்சிறுகுடல்: 26 சமீ (9.84 அங்) நீளம்.

நடுச்சிறுகுடல்: 2.5 மீ (8.2 அடி) நீளம்.

பின்சிறுகுடல்: 3.5 மீ (11.5 அடி) நீளம்.

சிறுகுடல், பெருங்குடலிலும் 4 - 5 மடங்கு நீளம் கொண்டு பெரியதாக இருந்தாலும், இதன் விட்டம் சிறியதாக இருப்பதால் சிறுகுடல் என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக, வளர்ந்த மனிதரில் சிறுகுடல் 2.5-3 சமீ விட்டம் கொண்டதாகவும், பெருங்குடல் 7.6 சமீ விட்டம் கொண்டதாகவும் இருக்கின்றன.

முன்சிறுகுடல்

இங்கு சதயச்சாறு மற்றும் பித்தநீர் என்பன சுரக்கும். இங்குச் சுரக்கும் நொதியங்கள் புரதத்தைக் கூறுகளாகப் பிரிப்பதுடன் கொழுப்பைச் சிறு கோளங்களாகப் பிரிக்கும். முன்சிறுகுடலில் காணப்படும் புறூனரின் சுரப்பியினால் இருகாபனேற்று உற்பத்தியாகும்.

இடைச்சிறுகுடல்

இது சிறுகுடலின் நடுப்பகுதியாகும். இது சடைமுளைகளைக் கொண்டிருப்பதால் உணவு அகத்துறுஞ்சப்படுவதற்கான மேற்பரப்பு அதிகரிக்கப்படுகின்றது. இங்கு அமினோ அமிலம், கொழுப்பமிலம், வெல்லங்கள் என்பன அகத்துறிஞ்சப்படுகின்றன.

பின்சிறுகுடல்

இதில் காணப்படும் சடைமுளைகள் முதன்மையாக விட்டமின் B12 மற்றும் பித்த அமிலங்கள் மற்றும் மீந்திருக்கும் போசணைக் கூறுகளை அகத்துறுஞ்சும்.

பெருங்குடல்

பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும். பாலூட்டிகளில் இது ஏறு பெருங்குடல், இறங்கு பெருங்குடல், குறுக்குப் பெருங்குடல், நெளிபெருங்குடல் என நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பெருங்குடல்வாயில் இருந்து இறங்கு பெருங்குடல் தொடக்கம் வரையுள்ள பகுதி வலது பெருங்குடல் எனவும் மீதி இடது பெருங்குடல் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

பெருங்குடல் வாய்

இது சிறுகுடலில் இருந்து பெருங்குடல் தொடங்கும் இடமாகும். இப்பகுதியில் குடல்வளரி எனப்படும் நீட்டம் காணப்படும்.

குடற்குறை

இது ஏறுகுடற்குறை, கிடைக்குடல், இறங்கு குடற்குறை மற்றும் வளைகுடல் என பகுக்கப்படும். இதன் முக்கிய தொழிற்பாடு நீரை அகத்துறுஞ்சுவதாகும். இதில் அடங்கியுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் K முதலான பயனுள்ள தொகுப்புகளையும் செய்யக் கூடியது.

மலக்குடல் (அ) நேர்குடல்

இது 12 சதம் மீட்டர் (4.7 அங்) நீளமானது. மலக்கழிவுகளை தற்காலிகமாகச் சேமிப்பது இதன் தொழிற்பாடாகும். சுவர்களின் தசைகள் அசைவு மூலம் மலம் வெளித்தள்ளப்படும்.

முளையவியல்

குடல் அகத்தோலில் இருந்து விருத்தியடைந்த ஒரு பாகமாகும். முளையவிருத்தியின் கிட்டத்தட்ட 16வது நாளில் முளையம் இரு திசைகளில் மடிப்புறத் தொடங்கும்.

இழையவியல்

மனித இரையகக் குடற்பாதை பொதுவான இழையவியல் கட்டமைப்புடன் அதன் தனித்துவமான தொழிற்பாடுகளுக்குரிய விருத்திகளையும் கொண்டிருக்கும்.

இழையங்கள்

சீதமென்சவ்வு

சீதமென்சவ்வு இரையகக் குடற்பாதையின் உள்ளக அணி ஆகும். இதன் உட்பகுதியில் சமிபாடடைந்த உணவு கொண்டுசெல்லப்படும்.

இது மூன்று மேலணிகளைக் கொண்டிருக்கும்.

புறவணியிழையம் -

தனித்துவப் படை (Lamina propria)

தசைச் சீதச்சவ்வு (Muscularis mucosae)

கீழ் சீதமென்சவ்வு

இது இணைப்பிழையங்கள், குருதிக்குளாய்கள், நிணநீர்க் கலன்கள், மற்றும் நரம்புகளைக் கொண்டு சீரற்ற படையாகக் காணப்படும்.

தசைச் சீதச்சவ்வு

தசைச் சீதச்சவ்வு உள்ளக வட்டத் தசைப் படையையும் நீளத்தசை கொண்ட படையையும் கொண்டிருக்கும். வட்டத் தசை உணவு பின்நோக்கி நகர்வதைத் தடுப்பதுடன் நீளத்தசை உணவுக்குழாய் சுருங்குவதும் ஏற்படுத்துகின்றது. ஆயினும் இந்த படை மெய்யான நீள்பக்கத்தசை மற்றும் வட்டத்தசைகள் அல்ல. இவை சுருளியுருவான தசைகள்.

ஆதாரம் : உலக சுகாதார அமைப்பு

கடைசியாக மாற்றப்பட்டது : 6/16/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate