অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

அல்சர்

அல்சர்

அல்சர் என்பது என்ன?

இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர்.

அதிலும் சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவில் இளைஞர்களிடமும் இளம்பெண்களிடமும் அல்சர் தொல்லை மிகவும் அதிகரித்துவிட்டது. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் தொல்லை ரொம்பவும் இயல்பாகிவிட்டது.

தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.

இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை ‘இரைப்பை அழற்சி' (Gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.

காரணங்கள்

காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது; மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது; ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது; உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பாக அமைகின்றன.

மேலும் சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன.

வேளை தவறிச் சாப்பிட்டால்

தினமும் வேளை தவறிச் சாப்பிடுபவர்களுக்கும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்குக் காரணம், நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே, ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவைச் சாப்பிடாவிட்டால், இந்த அமிலம் இரைப்பையின் மியூகஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது.

அதுபோல் உணவைச் சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். காரணம், புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலி ஏற்படுகிறது.

பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் வயிறு, இரைப்பை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசித்து என்டோஸ்கோப்பி பரிசோதனை மூலமாக இரைப்பையில் புண் உள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையைச் செய்யும்போதே இரைப்பையிலிருந்து ‘பயாப்சி’ (Biopsy) எடுத்து, இரைப்பைப் பிரச்சினைக்கு எச்.பைலோரி காரணமா என்பதையும் கண்டுபிடித்துவிடலாம்.

பாதிப்புகள் என்ன?

இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். அப்போது புண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ரத்த வாந்தி வரலாம். புண் இரைப்பையில் இல்லாமல், முன்சிறுகுடலில் இருந்தால், குடல் அடைப்பு ஏற்படுவதுண்டு. சமயங்களில் குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

சிகிச்சை என்ன?

இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிப்படுத்திக்கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். இதுபோல், முன்சிறுகுடலில் அடைப்பு உண்டானவர்களுக்கும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

அல்சர் வருவதைத் தடுக்க

முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.

வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள். கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக்கூடாது.

எச்.பைலோரி கிருமி அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. ஆகவே, இதைத் தடுக்கச் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

இரைப்பைப் புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும். மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். இதற்குத் தியானம் செய்வது நல்லது, இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் உள்ளன. தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை முறைப்படி செய்துவர, இரைப்பைப் புண் வருவதைத் தடுக்கலாம்.

ஆதாரம் : அரசினர் ஸ்டான்ஸி மருத்துவமனை.

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate