অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வட்டார அமைப்புகள்

வட்டார அமைப்புகள்

நோக்கம்

ஒன்றியம் நகரம், நகரியம் மற்றும் மாநகங்களிலும், பெருநகரங்களிலும் உள்ள பகுதிகள் ஆகிய எல்லைகளுக்குள் கட்டமைக்கப்படும் அமைப்புகளே வட்டார அமைப்புகளாகும்.

ஓன்றிய அளவில் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே ஒன்றிய அமைப்பாகவும், நகரம் மற்றும் நகரியம் அளவில் ஐந்திற்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்புகளே நகரம் மற்றும் நகரிய அமைப்புகளாகவும், சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உள்ள பகுதி அளவில் இருபதுக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே பெருநகரப் பகுதி அமைப்பாகவும் திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் உள்ள பகுதி அளவில் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே மாநகரப்பகுதி அமைப்பாகவும் ஏற்கப்படும். பெருநகரப்பகுதி என்பது சட்டமன்றத் தொகுதிப் பரப்பைக் குறிப்பதாகும். மாநகரப்பகுதி என்பது மாநகராட்சி நிர்வாகத்துக்குட்பட்ட மண்டலப் (டிவிசன்) பரப்பைக் குறிப்பதாகும்.

பொதுக்குழு (ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் மாநகர, பெருநகரப் பகுதிகள்)

  • வட்டார அளவிலான உயர்நிலை அதிகாரம் கொண்ட இப்பொதுக்குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அமைப்புகளின் அந்தந்த செயலாளர் தலைமையில் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கூடும்.
  • இடைப்பட்டக் காலங்களில் தேவையையொட்டி, மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதல் அல்லது ஒப்புதலின் அடிப்படையிலோ, வட்டார அமைப்புப் பொதுக் குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.
  • பொதுக்குழுவில் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாயிருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
  • பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கூட்டம் நடத்துவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக செயலாளர் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

செயற்குழு

செயலாளர் முன்வைக்கும் செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

செயற்குழு முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கானச் செயல்திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அமைப்புகளின் பொறுப்பாளர்களாக, செயலாளர் ஒருவர், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச்செயலாளர் ஒருவர் ஆகியோரையும், வட்டார அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.

சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்களை நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.

பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்

  • வட்டார அமைப்புக் குழுவின் பொறுப்பாளர்கள்.
  • வட்டார அமைப்புச் செயற்குழு உறுப்பினர்கள்.
  • முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.
  • துணைநிலை அமைப்புகளின் முகாம் செயலாளர்கள் மற்றும் வட்டார அளவிலான பொறுப்பாளர்கள்.
  • அணிகளின் வட்டாரப் பொறுப்பாளர்கள்.
  • வட்டார அமைப்பிலிருந்து மாவட்ட அமைப்பிற்குத் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்.
  • மாவட்ட அமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

செயற்குழு ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் மாநகர பெருநகரப் பகுதிகள்

மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், வட்டார அமைப்புகளின் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது வட்டார அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே வட்டார அமைப்புகளின் செயற்குழுவாகும்.

இச்செயற்குழு இரண்டு மாதங்களுக்கொருமுறைச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மாவட்டச் செயலாளரின் அனுமதியோடு செயலாளரோ அல்லது செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்புச் செயற்குழு கூட்டப்படும்.

செயற்குழுவின் பணிகள்

  • மேலமைப்புகளின் வழிகாட்டுதல் மற்றும் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
  • இயக்கத்தின் வட்டார அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொருப் பொதுக்குழுவிலும், செயற்குழு முன்வைக்கும்.
  • அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழி நடத்தவுமானப் பணிகளை செயற்குழு செய்யவும்.
  • இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிற, சட்ட விதிமுறைகளை மீறுகிற செயற்குழு உறுப்பினர்கள் மீது செயற்குழுவின் மொத்த செயற்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
  • செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை செயற்குழுத் தெரிவு செய்யும்.
  • வழக்கமான செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், நிதிச் செயலாளர் முன் வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.
  • வட்டார அளவிலான அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.
  • இயக்கத்தின் அதிகாரபூர்வமான ஏடுகள், ஒலி-ஒளிப்பேழைகள் மற்றும் பிற வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே கொள்கைகளைப் பரப்பிடவும், ஆதரவை பெருக்கிடவும் தேவையான செயல்திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.

செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்

  • செயலாளர், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச் செயலாளர்.
  • செயற்குழு உறுப்பினர்கள்.
  • மாவட்ட அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டப் பிரதிநிதிகள்.
  • வட்டார அளவிலான அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள்.
  • மாவட்டச் செயலாளரின் ஒப்புதலோடு செயலாளரின் அனுமதி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

விதிகள்

வட்டார அமைப்பின் விதி 1

செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

வட்டார அமைப்பின் விதி 2

வழக்கமாகக் கூட்டப்படும் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், செயற்குழு உறுப்பினர்களுக்குச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.

வட்டார அமைப்பின் விதி 3

தவிர்க்கமுடியாதக் காரணங்களால் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

வட்டார அமைப்பின் விதி 4

செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.

செயற்குழுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை பங்கேற்காதவர்கள் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

வட்டார அமைப்பின் விதி 5

செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நிகழ்க் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் செயற்குழுக் கையாள வேண்டும்.

வட்டார அமைப்பின் விதி 6

  • செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்துச் சுருக்க அறிக்கையினை செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.
  • செயலாளர் உட்பட செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு செயற்குழுவிலும், செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு – செலவு அறிக்கைகளையும் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
  • தேவையெனில், செயலாளர் மூலம் செயலாளர்களின் கூட்டத்தை செயற்குழு முடிந்த ஏழு நாட்களுக்குள் கூட்டலாம்.
  • வட்டார அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி – ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் செயலாளர் மாவட்டச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.
  • மேலமைப்புகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு-செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate