অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கடலில் முதலுதவி

கடலில் முதலுதவி

கடலில் முதலுவியைப் பற்றி ஒவ்வொரு மீனவரும் அறிந்து வைத்திருத்தல் இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமான ஒன்றாகும். முதலுதவியைப் பற்றி ஏற்கனவே தெரிந்தாலும் அவற்றைப் பற்றிய தனிப்பட்ட சிறப்புப் பயிற்சி அவசியம். முதலுதவி பற்றித் தெரிந்து வைத்திருந்தாலும் முதலில் உதவி செய்வது புனிதமான செயலாகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக முதலுதவி முறைகளும் தற்பொழுது மாற்றமடைந்து வருகிறது. தற்பொழுது, உடல் நிலைப் பாதிப்பிற்கும், காயங்களுக்கும் பல்வேறு முறைகளில் முதலுதவி அளிக்கப்படுகின்றது. இத்தகைய முதலுதவிக்குத் தேவையான உபகரணங்களை மீன்பிடிப் படகில் வைத்திருத்தல் இன்றியமையாத ஒன்றாகும்.

முதலுதவி அளிப்பவர் தேவைப்படும் நபருக்கு எவ்வித தவறுமின்றி குறித்த நேரத்தில் செய்து முடிக்கவேண்டும். முதலுதவியானது பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் வரை, அவரின் உயிருக்கும், உடலுக்கும் நல்ல முறையில் பாதுகாப்புத் தருவதாக அமையவேண்டும். முதலுதவி என்பது விபத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவரை காப்பாற்றும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

முதலுதவியின் முக்கிய மூன்று குறிக்கோள்

  1. உயிரைப் பாதுகாத்தல்
  2. உடல் நலம் மேலும் பழுதடையாமல் காத்து அதனைச் சீரான நிலைக்குக் கொண்டு வருதல்.
  3. உடல் நலத்தை முன்னேற்றமடையச் செய்தல்.

முதலுதவி செய்பவரின் கடமைகள்

மருத்துவர் வரும் வரை ஆபத்தான நிலையில் இருப்பவரை காப்பாற்றுபவர் முதலுதவி செய்பவர் ஆவர். முதலுதவி அளிப்பவர், மிகப் பொறுமையாகவும், நம்பிக்கையுடன், நிதானமாகவும், பரபரப்பு அடையாமலும், அதே வேளையில் விரைவாகவும் உதவி செய்தல் வேண்டும். எனவே முதலுதவி செய்பவர்கள் விபத்து நடந்த இடத்தை விரைவில் அடைய வேண்டும். இது பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும்.

துரிதமாகவும், அதே நேரத்தில் மிகவும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும். இதனால், அடிப்பட்டவரின் வலி குறைய வாய்ப்புள்ளதோடு அவரின் உயிரைக் காப்பாற்றவும் இத்தகைய முயற்சிகள் காரணமாக அமையும். முதலுதவி செய்பவர், விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி நன்கு உணர்ந்து செயலாற்றுதல் வேண்டும். பாதிப்பை அறிந்தபின், மருத்துவர் பொறுப்பு ஏற்கும் வரையில், பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான முதலுதவிகளை அளிக்க வேண்டும்.

முதலுதவிக்குப் பின் பாதிக்கப்பட்டவரைத் தேவைக்கேற்ப படகைக் கரக்கு திருப்பியோ அல்லது மீன்பிடித்துக் கரைக்குத்திரும்பி கொண்டிருக்கும் ஏனைய படகின் மூலமோ கரைக்கக் கொண்டு வந்து உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதலுதவி செய்யும் முறைகள்

மீன்பிடிப் படகில் காயப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவருக்கு, முதலுதவியை மேற்கொள்ளும்போது கீழ்காணும் செயல்களை விரைந்து கவனிக்க வேண்டும்.

  1. அதிர்ச்சிபலமானதா அல்லது குறைவானதா?
  2. மூச்சு விடுதலில் சிரமம் உள்ளதா?
  3. மிதமிஞ்சிய இரத்த போக்கு ஏற்பட்டுள்ளதா?

இவற்றை அறிந்த பின், தேவையான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும்.

முதலுதவி முறைகள்

விபத்தின் தன்மைக்கேற்ப முதலுதவி முறைகள் மாறுபடும்.

மூச்சுத் திணறல்: சுவாசித்தல் மூலம்தான் தேவையான உயிர்வளி உடம்பின் பல்வேறு உறுப்புகளுக்கும் செல்கின்றது. சுவாசித்தல் நின்றுபோனால், சில நொடிகளில் மரணம் ஏற்படும்.

மூச்சுத்தினறலுக்கான முதலுதவிச் சிகிச்சை

மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவருக்கு அடிப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், முதலில் செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு நிமிடமும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் மிகவும் முக்கியமானவையாகும். மூச்சுத் திணறல் மிகவும் அதிகமாக இருந்தால், மயக்கம் வரவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற வேளையில் பாதிக்கப்பட்டவருக்கு கீழ்காணும் உணர்வுகள் ஏற்படும்.

  1. நாக்கு, தொண்டைக்குள் சென்றுவிட்டதுபோல் இருக்கும்.
  2. வாந்தி மற்றும் உமிழ் நீர் தொண்டையில் அதிகமாகச் சேரும்.
  3. தேவையற்ற வெளிப் பொருட்களான தூசி, மண் போன்றவைகள் வாயினுள் புகுந்திருந்தால்

அவை மூச்சுக் குழாயை அடைக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, வேண்டாதவை வாயினுள் புகுந்திருக்கும் சமயத்தில், பாதிக்கப்பட்டவர் மயக்கமுற்று இருந்தாலும், சுலபமாக மூச்சு விடுகிறாரா? என்பதை முதலுதவி செய்பவர் கவனிக்க வேண்டும்.

இத்தகைய நிலையிலுள்ள நபரை எளிதாக சுவாசிக்கச் செய்ய, அவரின் இறுக்கமான ஆடைகளை உடனே தளர்த்த வேண்டும். குறிப்பாக இடுப்பு, மார்பு மற்றும் கழுத்து பாகங்களின் மேல் உள்ள ஆடைகளைத் தளர்த்திவிட வேண்டும். பின்னர் அவரைப் படகுத் தளத்தில் படுக்க வைத்து, தலையை பின்புறமாக சாய்த்து, கைகளால் நன்கு தாங்கிப் பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், இடம் பெயர்ந்த நாக்கு சரியான இடத்திற்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், காற்று செல்லும் பாதை சீராகி பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் மூச்சு விட ஏதுவாகிறது. இவ்வாறு சிகிச்சை செய்த பின்னும் மூச்சுவிட ஆரம்பிக்கவில்லையென்றால், தாமதமின்றி மார்பு மற்றும் நுரையீரல் பகுதிகளை பல முறை அழுத்தி விட வேண்டும். இது மீண்டும் மூச்சுவிட ஓரளவு பலன் தரும். மேலும் மூச்சுத் திணறல் ஏற்பட்டவர் வாயின் மீது முதலுதவி செய்பவர் தன்னுடைய வாயை வைத்து காற்றை உள்ளே செலுத்தி மீண்டும் இழுக்க வேண்டும். இது மிகவும் எளிமையான மற்றும் சுலபமான முறையாகும்.

வாய் மூலம் காற்றைச் செலுத்துதல்

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மீனவரை வசதியாய் படுக்க வைத்து அவரது தலையைச் சாய்த்தவாறு கைகளால் நன்கு தாங்கிப் பிடித்துக் கொண்டு மூக்குத் துவாரத்தைச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவரின் வாய்ப் பகுதியோடு, முதலுதவி செய்பவர் தன் வாயை வைத்து ஊதும் காற்று வாய் ஓரமாக வெளியேராத வண்ணம் நுரையீரலுக்குச் செல்லுமாறு காற்றைப் பலமாக ஊத வேண்டும். இதுபோல், 10 முதல் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். மார்புப் பகுதி நன்கு உயரவில்லையெனில், பாதிக்கப்பட் மீனவரை, ஒரு பக்கமாக சாய்த்து முதுகில் லேசாக தட்டினால், வாய்ப் பகுதியில் அடைபட்ட தூசி, மணல் போன்றவை தொண்டை வழியே வெளிவர ஏதுவாகும். இவ்வாறு செய்த பின், ஒரு சுத்தமான துணி கொண்டு வாய் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். இதயத் துடிப்பு நன்றாக இல்லையெனில், வாய் மூலம் செயற்கை சுவாசமளித்தலை பாதிக்க்ப்பட்ட நபர் தானாக மூச்சுவிடும் அளவிற்கு முன்னேற்றம் அடையும் வரை தொடர வேண்டும். இதயத் துடிப்பு சரிவர இல்லாமல் இருந்தால், பாதிக்கப்பட்ட மீனவரின் முகம் நீல நிறமாகவோ அல்லது வெளுத்தோ காணப்படும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்நபரை ஒரு மேசை மீது படுக்க வைத்து, முதுகில் பலமாகக் கையினால் தட்டினால், இதயம் வேலை செய்யத்தொடங்கும். ஒரு தடவை என்றில்லாமல் இம்முறையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிட்டும்.

காயம் மற்றும் இரத்தச் கசிவு

தோல், சதை மற்றும் எலும்பு போன்ற பகுதிகளில் அடிபட்டு அல்லது வெட்டுப்பட்டு பிளவு ஏற்படுவதால் காயங்கள் உண்டாகி இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு ஏற்பட்ட காயங்கள் வழியாக கிருமிகள் புக அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே எங்கு அடிப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி காயம் எந்த அளவிற்கு ஆழமானது என்பதையும் கவனிக்க வேண்டும். இதன் பின்னர் இரத்தப் போக்கை நிறுத்த, இரத்தம் கசியும் இடத்தைச் சுத்தமான ஒரு தக்கைகொண்டு. சுமார் மூன்று நிமிடங்களுக்குமேல் அழுத்த வேண்டும். முதலில், காயத்தை நல்ல தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து பின் தோலின் மீது ஒட்டியுள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை சுத்தமான ஒரு துணியால் நீக்க வேண்டும். முதலில் தே¨வாயன அளவு நல்ல நீர் கொண்டு, காயத்தை கழுவ வேண்டும். பிறகு, கிருமி நாசினியிட்டு நன்கு சுத்தமான உலர்ந்த காயம் கட்டும் துணியை வைத்து காயத்தை மூடி, அதன் மேல் ஒரு சுத்தமானத் துணியைக் கொண்டு கட்டுபோட வேண்டும்.

இரத்தக் கசிவு ஏற்பட்டவரின் அடையாளங்கள்

  1. பாதிக்கப்பட்டவர் மயக்கடைவார்.
  2. உடல் குளிர்ந்து, தோல் வெளுக்கும்.
  3. நாடி வேகமாக ஆனால் பலவீனமாகத் துடிக்கும்.
  4. மூச்சுவிடுதல் விடுவது குறைச்து காணப்படும்.
  5. அளவிற்கு அதிகமான வியர்வை காணப்படும்.
  6. தாகம் அதிகம் எடுக்கும்.
  7. மிதமிஞ்சிய வெளிப்புற இரத்தக்கசிவிற்கான முதலுதவி:

அதிர்ச்சி

பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி அடைந்திருந்தால், அவரைத் தேவையற்ற முறையில் கையாளாமல், அதற்குண்டான நிவாரணம் அளித்தல் வேண்டும். அதிர்ச்சியடைவதால் மூச்சு விடுதலில் பாதிப்பு ஏற்பட்டு, இதயத் துடிப்பு நின்று போகவோ அல்லது ரத்த நாளம் வெடித்து, அதிகமாக இரத்தக் கசிவு ஏற்படவோ வாய்ப்புகள் உள்ளன. அதிர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பை, சரியான நேரத்தில் குணப்படுத்தவில்லையெனில் உயிரிழப்பு நேரலாம். நினைவு இழப்பும் ஏற்படும். மேலும் மூச்சுத்திணறல், அதிக இதயத் துடிப்பு, கை மற்றும் கால் நடுக்கம் போன்றவையும் ஏற்படலாம். அதிர்ச்சியானது, உண்மையான அதிர்ச்சி மற்றும் நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் அதிர்ச்சி என இருவகைப்படும். உண்மையான அதிர்ச்சியானது, அதிக இரத்த இழப்பு, பலமான காயம், உடம்பிலுள்ள நீர் அளவுக்கு அதிகமாக வாந்திபேதியால் வெளியோறுவது போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படுகிறது. நரம்புத் தளர்ச்சியால் பயம், உணர்ச்சி வசப்படுதல் போன்ற காரணங்களினால் உண்டாகிறது. அதிர்ச்சியடைற்த நபர்கள்,மிகவும் தளர்ந்து, பார்வைமங்கி, தோல் பாகம் குளிர்ச்சியடைந்து. முகமும், உதடுகளும் வெளரி, நாடித் துடிப்பு குறைந்து, மயங்கிய நிலையில் இருப்பார்கள். அவர்களை, ஒரு இடத்தில் வசதியாக உட்கார வைத்து, தலையைச் சற்றே தாழ்த்தி, இருபுறமும் அசைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் வேளையில், உடம்பின் எந்த ஒரு பகுதியிலும் உராய்வு ஏற்படத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். எவ்வித காயமும் உடம்பின் எந்த இடத்திலும் இல்லை என்று தெரிய வந்தால், அதிர்ச்சியடைந்த நபருக்கு சூடான காபி, தேநீர், இளநீர் போன்ற பானங்களைக் கொடுத்து படகினை விரைவில் கரைக்குத் திரும்ப ஆவண செய்ய வேண்டும்.

சுட்டபுண் மற்றும் வெந்த புண்

பொதுவாக சப்தம் குறைக்கும் குழாய், படகின் என்ஜினின் சூடான பகுதி உடலில் படுவதாலும், மின்சாரக் கம்பியைத் தொடுவதாலும் சூடுபட்டு புண் உண்டாகிறது. கொதிக்கும் நீர், நீராவி, சூடான எண்ணெய் மற்றும் சூடான உலோகம் போன்றவை உடம்பில் எங்காவது பட்டுவிட்டால் வெந்த புண் ஏற்படும். தீக்காயங்களினால் உடலில் எந்த அளவிற்குப் புண் ஏற்படும் என்பது, உடம்பிலுள்ள திசுக்கள் தீயினால் எந்த அளவிற்கு சேதமடைகின்றன என்பதைப் பொருத்து அமையும்.

முதல் நிலை – தோல் சிவப்பாக மாறுவது (30%)

இரண்டாம் நிலை – தோலில் கொப்பளங்கள் உண்டாவது (50%)

மூன்றாம் நிலை – தோலின் அடிமட்ட திசுக்கள் பாதிக்கப்பட்டு கருகிய நிலைக்கு வருவது (70% – க்கு மேல்)

சுட்டபுண் எந்த இடத்தில் ஏற்பட்டுள்ளதோ அதைப் பொறுத்து உடலில் அதன் பாதிப்பு இருக்கும். புண்ணானது மேலோட்டமாக இருப்பினும், உடம்பின் பெரும்பகுதி சுட்ட புண்ணால் பாதிப்படைந்தால் அதுவும் மிகவும் ஆபத்தானதாக முடியும்.

தீக்காயத்திற்கான முதலுதவி

பொதுவாக, படகில் பணியில் இருக்கும் பொழுது ஆடையில் தீப்பிடித்தால் எப்படியாவது முதலில் தீயை அணைக்க முயல வேண்டும். தீப்பற்றிக் கொண்டவர். அங்குமிங்கும் ஓடக் கூடாது. அவ்வாறு ஓடினால், தீ காற்றினால் மேலும் பரவ ஏதுவாக அமையும். முடிந்த வரை, ஒரு போர்வை, கம்பளி அல்லது கனமான துணி கொண்டு உடம்பை சுற்றி, தரையில் உருளச் செய்து. தீயை அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயங்கிய நிலையில் இருந்தால் ஈரமான கைக்குட்டையை முகத்தில் சுற்றிக் குளிர்ச்சியூட்டி காப்பாற்ற முயல வேண்டும். அறையில் ஜன்னல் மற்றும் கதவுகள் இருந்தால், அவற்றைத் திறக்கக் கூடாது. அவ்வாறு திறந்தால், வெளிக் காற்று வேகமாக அறையினுள் புகுந்து தீயை அதிகரிக்கும். திக்காயம் ஏற்பட்டால் அதிகமாக வலி மற்றும் அதிர்ச்சி ஏற்படும். குணமடைந்த பின்னரும் தீப்பட்ட இடங்களில் அருவெருக்கத் தக்க தழும்புகள் உண்டாகும்.

தசைநார் மற்றும் கீல் இணைப்பில் சேதம்

நம் உடலில் தசைப் பகுதி, தசை நார்களினால் ஆனது. தசையானது உடலுக்குத் தகுந்த அழகை தருகிறது. உடலின் அசைவுகள், தசை நார்களினால்தான் செயல்படுத்தப்படுகின்றன. தசைகள், இயக்கு தசை மற்றும் இயங்கு தசை என இரு வகைப்படும். தலை, கழுத்து, கை, கால் போன்ற உறுப்புகளில், இயக்கு தசைகள் உள்ளன. இவை எலும்புடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைக்கப்பட்டுள்ளன. இவை இயக்கப்பட்டால் மட்டுமே இயங்குவதால் இயங்கு தசைகள் எனப்படுகின்றன. இயங்கு தசைகள், வயிறு, குடல், காற்றுக் குழாய், இரத்த நாளங்கள் மற்றும் இதயம் போன்ற பகுதிகளில் உள்ளன. இவை நம் விருப்பத்திற்கு இணங்க இயக்கப்படுவதில்லை, மாறக நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இயங்கு தசைகளில் சுளுக்கு, வெடிப்பு மற்றும் பிளவு போன்றவை ஏற்படலாம்.

அளவுக்கு அதிகமாக தசைகள் நீளுவதால் சுளுக்கு ஏற்படுகிறது. பொதுவாக, படகில் திடீரென பளுவான பொருட்களைத் தூக்கும்போது தசைகளில் முறுக்கு ஏற்பட்டு, சுளுக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் சுளுக்கால் தசைகளிலுள்ள நரம்புகள் அறுபட வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு சுளுக்கு ஏற்படும்போது, அதிக வலி உண்டாகும். தசைகள் வீங்கி விறைப்புத் தன்மை அடையும். தசையில் வெடிப்பு ஏற்பட்டால் அதிக வலி உண்டாகும்.

பாதிக்கப்பட்ட தசை பகுதியை அசைக்க இயலாமல் போகும் நிலைகூட ஏற்படலாம். இத்தகைய பிரச்சினைகளுக்கு முதலுதவி செய்ய முனையும்போது. முதலில் வலியைக் குறைக்க வழிசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு, சற்று ஒய்வு அளிக்க வேண்டும். பின்னர், மருத்துவரின் உதவியை நாடலாம். கையில் சுளுக்கு ஏற்பட்ட நபருக்கு முதலுதவி செய்யும்போது பாதிக்கப்பட்டவரை ஒரு இடத்தில் வசதியாக உட்காரச் செய்து, துணி கொண்டு கையை நேராக வைத்து கட்ட வேண்டும். சுளுக்கு காலில் இருந்தால், நீண்ட கைத்தடி ஒன்றைத் துணையாகக் கொடுக்கலாம். பின்னர், சுத்தமான துணி ஒன்றைக் குளிர்ந்த நீரில் நனைத்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பிழந்து விடலாம். கை, கால்களைக் கூட அசைக்க முடியவில்லையெனில், எலும்பு முறிவுக்கு எப்படி கட்டூப் போடுகிறோமோ, அம்மாதிரியாகக் கட்டுப்போட்டு, சுளுக்கு ஏற்பட்ட பகுதியை அசையவிடாமல் செய்து, படகுக் கரைக்குத் திரும்பிய உடன் பாதிக்கப்பட்டவரை தாமதமின்றி மருத்துவமனைக்க அழைத்துச் செல்ல வேண்டும்.

நரம்புச் சுளுக்கு

எலும்பு இணைப்புப் பகுதிகளிலுள்ள தசை நரம்புகள் கிழிந்து போவதால், நரம்புச் சுளுக்கு ஏற்படுகிறது. பொதுவாக, கணுக்காலில்தான் அடிக்கடி நரம்புச்சுளுக்கு ஏற்படும். நரம்புச்சுளுக்கு ஏற்பட்டால், கீல் பகுதியில் வலி இருக்கும், வீக்கம் ஏற்பட்டு பின்னர் நெரியும் கட்டும். முதலுதவி செய்யும்போது, வலி ஏற்பட்ட பகுதியில் ஏதாவதொரு சிறிய மரக்கட்டையை அணைத்து வைத்த. வலியைக் குறைக்கலாம். அல்லது துணியால் இறுக்கமாகக் கட்டி பாதிக்கப்பட்ட நபரை அசையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்ய வேண்டும். பொதுவாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்டது வலியா, நரம்புச் சுளுக்கா அல்லது எலும்பு முறிவா என்பதனை உறுதி செய்த பின்னர்தான். அதற்கேற்றவாறு சிகிச்சை செய்ய வேண்டும்.

எலும்பு இடப்பெயர்வு

இரு எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரம் இடத்தில் ஏற்படும் எலும்பு மாற்றத்தை எலும்பு இடப் பெயர்வு என்கிறோம். இது கழுத்து, கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும். இவ்வாறு எலும்புப் பெயர்வு ஏற்பட்டால், அதிக வலி ஏற்பட்டு, எலும்பு இணைப்புப் பகுதியை அசைக்க முடியாத சூழ்நிலை உருவாகும். மேலும் வீக்கம் ஏற்பட்ட, சில நேரங்களில் எலும்புப் பகுதி இயற்கையாக தோற்றமளிக்காமல் உருமாறிக் காணும், முதலுதவியின்போது, எக்காரணம் கொண்டும் ஏலும்பை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வர முயற்சிக்கக் கூடாது. எனவே பாதிப்படைந்த நபருக்கு முதலுதவி செய்ய முனையும் போது, முதலில் எலும்பின் அசைவைத் தடுத்து, வலியைக் குறைக்க வேண்டும். பின்னர் மருத்துவரின் உதவியை நாடலாம்.

பாதிக்கப்பட்ட இடம் கழுத்துப் பகுதியாக இருப்பின், ஒரு கட்டை அல்லது நன்கு மடிக்கப்பட்ட செய்தித்தாள் அல்லது துணியை கழுத்துப் பகுதியியல் வைத்து கட்டுப் போட வேண்டும். கைகளை உடம்புடன் சேர்த்து வைத்து துணியால் கட்டுப் போடுதல் அவசியம். பாதிக்கப்பட்ட நபரை அசையாமல் படகில் ஒரு படுக்கையில் படுக்கச் செய்து, மென்மையான பொருள்களை அணைப்பாக வைக்க வேண்டும். கட்டுப்போட்ட பகுதியானது மென்மையான பரப்பின் மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கீழ்த்தாடையில் இம்மாதிரி எலும்புப் பெயர்ப்பு ஏற்படும் வேளையில், செயற்கை பற்கள் இருந்தால், அவற்றை உடனே வெளியே எடுத்துவிட வேண்டும். கீழ்தாடைப் பகுதியை ஒரு துணியைக் கொண்டு கழுத்து மற்றும் தலையோடு நன்கு இணைத்துக் கட்ட வேண்டும். முழங்கையில் எலும்புப் பெயர்வு ஏற்பட்டால், கையைத் துணியால் சுற்றி அதனைக் கழுத்துடன் தொட்டில் போல் கட்டிவிட வேண்டும். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மின்சாரம் தாக்குதல்

படகின் மின்சார கம்பிகள் பட்டு மின்சாரத்தால் ஒருவர் தாக்குதல் அடையலாம். கை வழியாக மின்சாரம் பாய்ந்து ஏற்படும் தாக்குதலைவிட, நெஞ்சுப் பகுதியில் மின்சாரம் தாக்கினால் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். எனவே, படகில் மின்கம்பிகள் தொங்கும்விதமாக அமைக்கக் கூடாது.

ஆதாரம் : கிராம வள மையம், நாகர்கோவில்.

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate