অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மகிழ்ச்சியான கர்ப்ப காலத்திற்கு மரபு மருத்துவம்

மகிழ்ச்சியான கர்ப்ப காலத்திற்கு மரபு மருத்துவம்

கருத்தரிப்பு

கருத்தரிப்பு மகிழ்ச்சிகரமான விஷயமாக மட்டுமே கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. கருத்தரிப்பு தொடர்பான சந்தேகம் தோன்றும்போதெல்லாம், “நாமப் பிரெக்னென்டா இருக்கோமா? இல்ல, வேற ஏதாவது ஹார்மோன் பிரச்சினையா இருக்குமோ?” என்று குழம்பும் மனநிலை இன்றைக்கு அதிகரித்துவிட்டது.

`பிரெக்-கார்டு’ பரிசோதனை தொடங்கி `ஸ்கேன்’ மற்றும் மருத்துவரின் பரிசோதனைவரை முடிந்து மகப்பேறு உறுதியானாலும்கூட, உடனே உற்றார், உறவினருக்கு அறிவிப்பதையும்கூட எல்லோரும் இப்போது விரும்புவதில்லை. எல்லாம் நல்லபடியாகக் கூடி வரும்போதே சொல்கிறார்கள். இப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய கர்ப்பக் காலத்தில், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க இயற்கை நிறைய வரப்பிரசாதங்களை அளித்திருக்கிறது.

முதன்மை அறிகுறி

`வாந்தி வருவது’ மகப்பேறை உறுதி செய்ய முக்கிய அறிகுறி. முதல் மூன்று மாதங்களில் காலை எழுந்ததும் ஏற்படும் குமட்டல், வாந்தி (Morning sickness) போன்றவை கருப்பையில் குழந்தை நன்றாக வளர்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளாக இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு என்னவோ சற்று ஆயாசம் தரும் விஷயம்தான். கர்ப்பக் காலத்தில் அதிகளவு வாந்தி ஏற்படுவது வேறு பல தொந்தரவுகளை உண்டாக்கலாம்.

வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கச் சித்த மருந்தான மாதுளை மணப்பாகை ஐந்து மி.லி. அளவு, ஒரு டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு வேளை அருந்தலாம். மாதுளை மணப்பாகு என்பது மாதுளம் பழச்சாறு, தேன், கற்கண்டு சேர்ந்து செய்யப்படும் மருந்து.

மாமருந்து மாதுளை

மாதுளையில் அதிகளவு வைட்டமின் சி இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பாற்றலைத் தரும். மாதுளையில் உள்ள ஆன்ட்டி-ஆக்ஸிடண்ட், கருவுக்கு ஊட்டம் தரும் ‘Placenta’ வுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

“கருப்பையில் வளரும் குழந்தையின் மூளையில் ஏற்படும் பாதிப்புகளையும் மாதுளை தடுக்கிறது” என்கிறது Pediatric research ஆய்விதழ். இரும்புச் சத்தை அதிகம் கொண்டிருப்பதால், ‘ஹீமோகுளோபின்’ அளவை அதிகரித்து, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தக் குறைவு (Anaemia) நோயையும் இது மட்டுப்படுத்தும். ரத்தக் கொதிப்பு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது கொண்டிருப்பதால், கர்ப்பக் காலத்தில் உண்டாகும் உயர் ரத்தஅழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது. மாதுளையில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால், மலத்தை இலகுவாக வெளியேற்றும்.

இனிப்புச் சுவையுள்ள மாதுளை குளிர்ச்சி தரும் செய்கையைக் கொண்டிருப்பதால், கர்ப்பக் காலத்தில் உடலின் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது. அதிக தாகம், வாய் நீர் ஊறல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை மாதுளை குறைக்கும் என்பதை “வாய்நீருறல் வாந்தி வெப்பம் நெஞ்செரிவு மயக்கமுந் தீர்ந்துவிடுமே” என்ற தேரையரின் வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலை பசியைத் தூண்டும் செய்கையைக் கொண்டிருப்பதால், மகப்பேறு காலத்தில் ஏற்படும் மந்தத்தைப் போக்கி, உணவைச் செரிக்கும் தன்மையை அதிகரிக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள இரும்புச் சத்து, ரத்த அணுக்களை அதிகரித்து உடல் திசுக்களுக்கு அதிகளவில் பிராண வாயுவைக் கிடைக்கச் செய்கிறது.

இதில் வைட்டமின்களும் தாதுகளும் அதிகளவில் அடங்கி இருப்பதால் உடலுக்கு உரம் கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த கறிவேப்பிலை கர்ப்பிணிகளுக்கு உண்டாக்கும் மலக்கட்டை விரட்டும். அதிகரித்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தியும் கறிவேப்பிலைக்கு இருப்பதாக Journal of Ethnopharmacology இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவுகள் கூறுவதால், மகப்பேறு காலச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கக் கறிவேப்பிலைப் பொடியைச் சாப்பிடலாம். மிதமான வெந்நீரில் ஒரு கிராம் கலந்து குடிக்கலாம்.

பழங்களின் ஆதரவு

போலிக் ஆசிட் சத்து நிறைந்த வாழைப்பழம், சிறந்த மலமிளக்கியும்கூட. உடனடி ஆற்றல் தரக்கூடிய வாழைப்பழத்தைக் கர்ப்பிணிகள் சாப்பிடலாம். மலக்கட்டைத் தவிர்க்க அதிகளவில் கீரைகள், கனிந்த கொய்யா உட்கொள்வது அத்தியாவசியம். கீரைகளில் பொதிந்துள்ள வைட்டமின்களும் தாதுகளும், தேவையான ஊட்டத்தை அள்ளிக் கொடுக்கின்றன. அதிக வாந்தி காரணமாக இழந்த நீர்ச்சத்தை மீண்டும் பெற சாத்துக்குடி சிறந்த தேர்வு.

வலிகள் மறைய

கர்ப்பிணிகளுக்குப் பொதுவாக உண்டாகும் முதுகு வலி, கை, கால் வலிகளின் தீவிரத்தைக் குறைக்க, உளுந்துத் தைலம், பிண்டத் தைலம், குந்திரிகத் தைலம் ஆகிய எண்ணெய் வகைகளை மிதமாகச் சூடேற்றி, வலியுள்ள பகுதிகளில் தடவலாம். சுகமான மகப்பேற்றுக்கென உள்ள சில ஆசன முறைகளை, மருத்துவரின் அறிவுரையோடு தொடர்ந்து செய்துவரலாம். வயிற்றுப் பகுதியில் பிண்டத் தைலத்தை லேசாகத் தடவிவருவதன் மூலம், தோலில் ஏற்படும் நிற மாற்றங்கள் விரைவில் மறையும்.

மருந்துகள் அனைத்தையும் மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும். மகப்பேறு காலத்தில் மகப்பேறு மருத்துவருடன் ஒரு சித்த மருத்துவரையும் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைந்த மருத்துவத்தை மேற்கொண்டால், தொந்தரவுகள் இல்லாத கர்ப்பக் காலம் நிச்சயம் வாய்க்கும்.

சில அறிகுறிகளுக்கு எளிய மருந்துகள்

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் செரியாமை, மார்பெரிச்சல் போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்க ஏலாதி சூரண மாத்திரை ஒன்றை, இரண்டு வேளை எடுத்துக் கொள்ளலாம்.
  • சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப் பாதை தொற்றுகளையும் ஏலாதி மாத்திரை தடுக்கிறது. உணவு எதிர்க்களிக்கும் தொந்தரவுக்கு, நீரில் சிறிது சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால் குணம் கிடைக்கும்.
  • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நெல்லிக்காய் லேகியம் ஐந்து கிராம் ஒரு வேளை, இரும்புச் சத்து குறைபாட்டைப் போக்க அன்னபேதி செந்தூர மாத்திரை ஒன்றை இரண்டு வேளை பயன்படுத்தலாம்

ஆதாரம் : மரபு மருத்துவம் கையேடு

கடைசியாக மாற்றப்பட்டது : 5/28/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate