অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மனக்கோளாறுகள்

மனக்கோளாறுகள்

அறிமுகம்

மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!). இது பொது மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான (சிறப்பு மனநல மருத்துவர்களைத் தவிர்த்து) மருத்துவர்களுக்கும் பொருந்தும். மருத்துவப் படிப்பில் மனநோய் பயிற்ச்சி மிகக் குறைவே. தமிழ் இலக்கியங்களிலும் புனை கதைகளிலும் கூட மனக்கோளாறுகள் உள்ள கதை மாந்தர்களைக் காண முடியாது! தமிழ்ப் படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். மனக்கோளாறுகள் என்றால் என்ன என்பது பற்றி அறிவியல் பூர்வமான சில அடிப்படைத் தகவல்களை அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

காரணங்கள்

  • உடற்கோளாறுகள் / உடல் நோய்கள் நேரடியாக கண்ணுக்குத் தெரிபவை; மனக்கோளாறுகள் உளம் சார்ந்தவை, பெரும்பாலும் நோய் முதிர்வடையும் வரை கண்ணுக்குத் தெரிவதில்லை. கால் உடைந்து கட்டுப் போட்டுக்கொண்டிருப்பவனுக்கு காட்டப்படும் அனுதாபமும் கரிசனையும் மனச்சோர்வினால் துயரத்தில் ஆழ்ந்திருப்பவனுக்கு கிடைப்பதில்லை.
  • பொதுவாக, மனக்கோளாறுகள் உண்மையானவை என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. அவை மன பவீனத்தினாலும், ஆளுமை குறைபாட்டினாலும் உண்டாகின்றன என்பது பலரின் கருத்தாக இருக்கிறது; தானாக வலுவில் உருவாக்கிக் கொள்ளப்பட்டவை என்ற அபிப்பிராயமும் உண்டு. “என்ன செய்றது? சரிதான், வேலையைப் பாக்க வேண்டியதுதான்" என்று மனக்கோளாறை 'இயல்புபடுத்தும்' ஒரு மனப்பாங்கு காணப்படுகிறது.
  • மனக்கோளாறுகளைக் கொச்சைப் படுத்துவதும், எள்ளி நகையாடுவதும் எமக்கு ஒரு பொழுதுபோக்கு (தமிழ்ப் படங்களில் மனநோய்கள் சித்தரிக்கப்படுவதை காண்க). 'பைத்தியம்'. 'கிறுக்கு', 'லூசு', 'மென்டல்' என்று பல 'செந்தமிழ்' சொற்களால் வர்ணனை செய்யயும் பாரம்பரியம் நமக்குண்டு.
  • மனநோயாளர் காரணமில்லாமல் வன்முறையில் ஈடுபடுபவர்கள், கொலைகாரர்கள் என்ற அச்சம் பலரிடையே உண்டு. உண்மையில் மனக்கோளாறுகள் உள்ளவர்களில் மிக மிகச் சிலரே ஆக்ரோஷமாக நடந்துகொள்கிரார்கள்.

மனநோய் என்றால் என்ன

மனதில் ஏற்படும் பிறழ்வுகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பதில் பல சங்கடங்கள் உள்ளன. எல்லா மனப் பிறழ்வுகளும் மனநோய்கள் அல்ல. நோய் என்ற சொல்லுக்கு அறிவியல் சார்ந்த மருத்துவ ரீதியிலான வரையறை ஒன்றுண்டு. நோய் ஏன் ஏற்படுகிறது என்ற காரணம்/ காரணங்களை அறிந்தாக வேண்டும். உடல் உறுப்பில் நோயின் பாதிப்பை உறுதியாக நிரூபிக்க வேண்டும்; வெவ்வேறு நோய்க்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்க வேண்டும். ஒரு நோய் ஏற்பட்ட பின் அது எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று அனுமானிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். இந்த விதிகளுக்கு ஏற்றதாய் இருந்தால் மட்டுமே நோய் என்ற பதத்தை பாவிப்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், மன 'நோய்'களைப் பொறுத்தவரை, இதுவரை அதன் காரணங்கள் தெளிவுற கண்டுபிடிக்கப்படவிலை. ஒவ்வொரு நோயுக்கும் வெவ்வேறான காரணங்கள் உண்டு என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக, அதே மரபணுகள் வெவ்வேறு மனநோய்களை தோற்றுவிக்கின்றன

(மறதிநோயைத் தவிர்த்து) மூளையில் ஏற்பட்டும் பாதிப்புகள் ஐயத்துக்கிடமின்றி எடுத்துக்காட்டப்பட வில்லை! சில 'மனநோய்'களில் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மன"நோய்') மூளையில் மின் தூண்டல் கடத்திகள் (neuro-transmitters) போன்ற வேதிப்பொருள்கள் ஏற்படுத்தும் மாற்றங்களே காரணம் என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் மட்டுமே உள்ளன.

மனநோய் என்று அழைப்பதைவிட 'மனக்கோளாறுகள்', மனப்பிறழ்வுகள்', 'மனச் சீர்குலைவுகள்' என்ற பதங்கள் பொருத்தம்மானவை என்பது பொதுவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து. இதனால்தான், உலகளவில் DSM 5 வட அமெரிக்காவிலும், ICD 10 [4] என ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்படும் நோய் வகைபாடு முறைமைகளில் mental disorders என்ற சொற் பிரயோகம் பாவனயில் உள்ளது. மேலும், மன நோய் என்ற பதம் தப்பாக புரிந்துகொள்ளப் படுகிறது. இதனால், இங்கே மனக்கோளாறு என்ற சொல் உபயோகிக்கப் படுகிறது. தமிழ் புலமை பெற்றவர்கள் இதை விட பொருத்தமான ஒரு பதத்தை முன்மொழிவார்களானால் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.

இனி, மனக்கோளாறுகளைக் கவனிப்போம். மூளையின் உயர் செயல்பாடுகளான உணர்தல், சிந்தித்தல், நினைவுத்திறன் (memory), நடத்தை ஆகியவை குறிப்பிடும் படி சீர்குலைந்தும், அதனால் அன்றாட செயல்திறன் குறைவடையவும் போதும், அதை மனக்கோளாறு என்று அழைக்கிறோம்.

மனக்கோளாறுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். இவற்றை ஒன்றோடொன்று குழப்பிக் கொள்வதும் மனக்கோறுகள் பற்றிய தெளிவின்மைக்கு ஒரு காரணம்.

  1. கடுமையான மனக்கோளாறுகள் (severe and enduring mental disorders; severe mental illnesses): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையில் தீவிர தாக்கத்தை உண்டாக்கும், நீண்டகாலம் நீடிக்கும் (எ-டு, மனச்சிதைவு, இருதுருவ மனக்கோளாறு). இந்த வகையான மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை அப்போதைக்கு சீர்குலைந்து, அகத்துக்கும் புறத்துக்கும் உள்ள வித்தியாசம் அற்றுப் போய், நடத்தை தாறுமாறாகவும் சமுதாய வழமைகளுக்கு மாறுபட்டதாகவும் காணப்படும். இவற்றை, பொது மொழியில், உளப் பிறழ்வுகள் (psychoses) என்று அழைக்கப் படுகின்றன.
  2. பொதுவான மனக்கோளாறுகள் (common mental disorders): இவை பாதிக்கப் பட்டவரின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் சீர்குலைப்பதில்லை (எ-டு, மனப் பதற்றம் (anxiety), மனச்சோர்வு (depression)), பீதி (panic disorder), அதிர்ச்சியைத் தொடரும் மனஅழுத்தப் பிறழ்வு (post traumatic stress disorder), உள வழி உடல் பாதிப்பு (somatoform disorders), நிலைமாற்றப் பிறழ்வு (conversion disorder/hysteria).

மேலே கூறப்பட்ட மனக்கோளாறுகளுக்கப்பால் வேறு பல மனக்கோளாறுகளும் உண்டு. இவைகளில் பின்வருவன முக்கியமானவை:

  • மறதினோய் (dementia). இதில் அல்செய்மர் நோய் (Alzheimer's disease) முக்கியமானது
  • தவறான மது பாவனை (alcohol abuse)
  • போதைப் பழக்கம் (drug abuse),
  • உளம் சார்ந்த பாலுறவுக் கோளாறுகள் (psycho sexual disorders).
  • மனவளர்ச்சிக் குறைபாடும் (intelluctual disability/mental retardation) ஆர்டிசம் (autism) ஆகிய இரண்டும் மனக்கோளாறுகள் அல்ல; அவை வளர்ச்சிக் கோளாறுகள் (developmental disorders).

மனக்கோளாறுகள் பற்றியக் குழப்பங்கள்

மனக்கோளாறுகள் பற்றிய இன்னுமொரு குழப்பமும் உண்டு. மனக்கோளாறுகள் இயல்பான உணர்வு, சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் மிகையால் (அல்லது குறைபாட்டால்) ஏற்படுகிறதா , அல்லது இவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட வெளிப்பாடுகளா? எடுத்துக்காட்டாக, மனச்சோர்வில் காணப்படும் கவலையும் மனச்சோர்வும் சாதாரண சோகத்திலிருந்து வேறுபட்டதா, அல்லது மிகைப்படுத்தப்பட்ட அதே உணர்வா? தற்போது, மனக்கோளாறுகள் யாவும் பின் சொல்லப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவை என்றே நம்பப்படுகிறது. இது பலருக்கு வியப்பாக இருக்கலாம். உண்டு இல்லை என்று இருமையில், பண்புகளின் அடிப்படையில் (qualitative) வகைப்படுத்தாமல், இவை அளவுமுறையிலான வேற்றுமைகளே (quantitative) என்ற அணுகுமுறையே ஏற்றது என்பது மனநல அறிஞர்கள் கருத்து. மதுபாவனையை உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால், மதுப்பழக்கத்தை ஒரே பரிமாணத்தில் உள்ள வெவ்வேறு நிலைகளாக இவ்வாறு வகைப்படுத்தலாம்: அவ்வப்போது குடிப்பது (social drinking), அளவு மீறிக் குடிப்பது (hazardous use), உடலுக்குத்தீங்கு விழைவிக்கும் மதுப்பழக்கம் (harmful use) , மது சார்பு நிலை (alcohol dependance). குருதி அமுக்கம் 140/90 மிமீ ஐ மீறும்போது உயர் குருதி அமுக்கம் (high blood pressure; hypertension) என்று அழைக்கப்படுவது போல, கவலையும் சோகமும் ஓர் எல்லையை மீறும்போது மனச்சோர்வு என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.

உடல் நோய்களுடன் ஒப்பிடும்போது மனக்கோளாறுகள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன என்பதும், அவை நம் நாட்டில் மிகக் குறைவு என்ற ஓர் எண்ணமும் நம்மிடையே உண்டு. தவறு! வட அமேரிக்காவில் நடத்தப்பட்ட ஓரு பிரபலமான ஆய்வின்படி 26.2 விழுக்காடு அளவு மக்களிடையே ஏதாவது ஒரு மனக்கோளாறு காணப்படுகிறது என்று கணிக்கிடப்பட்டது. இந்தியாவிலும் இம்மாதிரியான பல ஆய்வுகள் நடத்தப்பட்டுளன. இவை நமக்கு தரும் தகவல்களின் படி இந்தியாவில் 20 விழுக்காடு அளவு மக்களிடையே ஏதாவது ஒரு மனக்கோளாறு கண்டறியப்படுகிறது.

உண்மையில் இந்த விகிதாசாரம் கூட குறைவான ஒரு மதிப்பீடே என்பது இந்த ஆய்வாளர்களின் கணிப்பு. ஒப்பீட்டுக்காக, தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் (இரண்டாம் வகை) இதைவிட குறைவாகவே, 10.4 விழுக்காடு அளவிளேயே, காணப்படுகிறது

எல்லா நாடுகளிலும் மனக்கோளாறுகள் ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

மனக்கோளாறு உண்டாவதற்கான காரணங்கள்

மனக்கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் துல்லிதமாக அறிந்துகொள்ள முடியாத போதிலும், பல உயிரியல், உளவியல், சமூகவியல் காரணிகளின் ஒன்று கூடலால் மனக்கோளாறு ஏற்படுகிறது என்பதுதான் தற்போதுள்ள கருத்து. உயிரியல் காரணிகளில் மரபணுக்களுக்கு ஒரு பங்கு உண்டு. ஆனால், இதுவரை எந்தவொரு மனக்கோளாறுக்கும் காரணமான மரபணுகள் அடையாளம் காணப்படவில்லை. சில மனக்கோறுருகளில் (எ-டு, மனச்சிதைவு) பெற்றோரில் ஒருவருக்கு மனக்கோளாறு இருந்தால் அவரின் குழந்தைகளுக்கு அது ஏற்படும் வாய்ப்பு சராசரியாக 10 -15 விழுக்காடு என்று மட்டும் அறியப்படுகிறது. மேலே கூறியபடி, அதே மரபணுக்கள் வெவ்வேறு மனக்கோளாறுகளுக்கு இட்டுச் செல்லலாம். மன அழுத்தங்கள், இழப்புகள், குழந்தைப் பிராய அனுபவங்கள், உறவுகளில் ஏற்படும் நெருக்கடிகள், குடும்ப பிணக்குகள் ஆகியவை மனக்கோளாறுகள் ஏற்பட உந்து சக்திகளாக அமையலாம். சமூகக் காரணிகளில் வறுமை, சமூக ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, வேலைப் பழு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

மனக்கோளாறுகளைக் கண்டறிதல் (diagnosis)

மனக்கோளாறுகளைக் கண்டறியும் மிகப் பழமையான முறைகளான நோயின் சரிதம் (history), உள நிலை பரிசோதனை (mental state examination) ஆகியவற்றேயே நம்ப வேண்டி உள்ளது. புதிய, தொழில்நுட்ப உபகரணங்களாகிய சி.டி ஸ்கேன் (CT scan ), எம். ஆர். ஐ. ஸ்கேன் (MRI scan) போன்ற சோதனைகள் உதவுவது இல்லை. எனவே, உடல் நோய்களைக் கண்டறியவும் உறுதிப்படுத்தவும் மிகப்பெரும் உதவியான குருதிச் சோதனைகளும், உடலின் அமைப்பிலும் தொழிற்பாட்டிலும் உள்ள சீர்கேடுகளையும் அடையாளம் காண துணை செய்யும் மேல் கூறிய ஸ்கேன்களும் மனக் கோளாறுகளைக் கண்டறிவதில் உதவ மாட்டா.  ஒரு வகையில் பார்க்கும்போது மனநோய் மருத்துவத்தில் 'கண்டறியும் கலை' (diagnosis) இன்னும் கற்காலத்திலேயே இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னொரு கோணத்திலிருந்து நோக்கினால் மனக்கோளாறுகளைக் கண்டறிய உரிய பயிற்சி, அனுபவம், கூரிய அறிவும் திறமையும் தேவை.

சிகிச்சை முறைகள்

மேலே கூறிய முப்பரிமாண - உயிரியல், உளவியல், சமூகவியல் - அணுகுமுறையே (bio-psycho-social approach) சிகிச்சையிலும் பின்பற்றப் படுகிறது.

உயிரியல் சார்ந்த சிகிச்சைகள்

மனச்சோர்வு நீக்கி மருந்துகள் (antidepressants), உளப் பிறழ்வு எதிர்ப்பு மருந்துகள் (antipsychotics) , பதற்றம் நீக்கி மருந்துகள் (antianxiolytics) மிந்தூண்டல் சிகிச்சை (ECT, electroconvulsive therapy) ஆகியவை மனக்கோளாறின் குறிகுணங்களை கணிசமான அளவு குறைக்கும் என்பதற்கு ஆராய்ச்சி பூர்வமான ஆதாரங்கள் உண்டு

மின்தூண்டல் சிகிச்சை

உளவியல் சார்ந்த சிகிச்சைகளில், ஆராய்ச்சி சான்றுசார் சிகிச்சை வழிமுறைகளில் முன் நிலையில் இருப்பது அறிவினை நடத்தை சிகிச்சையே (CBT, cognitve behaviour therapy). இதில் மனக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்களிடம் காணப்படும் வழக்கமான சிந்தனைகளை மாற்றினால் உணர்வுகளும் மாற்றமடையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையாகக் கொண்டு மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனக்கோளாறுகளில் பயன்படுத்தப்படுகிறது. உளப்பகுத்தாய்வு (psychoanalysis) என்ற ஃராய்டிச கருத்துகள் தற்போது வலுவிழந்த சிகிச்சை முறைகளாகக் கருதப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு மிகச் சொற்பமே என்பது ஆராய்ச்சிகள் தரும் தகவல். மனவசியம் (hypnotism) இப்போது மனக்கோளாறுகளில் பயன்படுத்தப் படுவதில்லை

சமூகவழி சிகிச்சைகளில் (சிலர் இதை உளம் சார்ந்தது என்றும் கூறலாம்) மனக்கோளாறுகளை பராமரிப்பதில் குடும்பத்தின் பங்கை வலியுறித்தி குடும்பத்தினருக்கு மனக்கோளாறின் தன்மையையும் பண்புகளையுமம் கற்றுக் கொடுத்தல், மனக்கோளாறு மீள ஏற்படுவதைத் தடுப்பது, குணமாவதற்கு இசைவான சூழலை ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

ஆதாரம் : டாக்டர். எம்.எஸ். தம்பிராஜா (கட்டுரை கீற்று)

கடைசியாக மாற்றப்பட்டது : 6/13/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate