நமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் தொடர்ந்து பிறந்த நிமிடம் முதல் இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. நமது உடம்பு ஒரு தொழிற்சாலை போல இயங்குகிறது என்றால் தினமும் உற்பத்தியாகும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த முக்கிய வேலையை சிறுநீரகங்கள் ஒரு வினாடி கூட ஓய்வின்றி இரத்தத்தில் உள்ள கழிவுகளை ஒரு நுணுக்கமான சல்லடை போன்று செயல்பட்டு சிறுநீரில் பிரித்து வெளியே அனுப்புகின்றன. அது மட்டுமன்றி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், எலும்புகளை பலப்படுத்த மற்றும் இரத்தம் உற்பத்திக்கு தேவையான சில சத்துக்களை உற்பத்தி செய்தல் என சிறுநீரகங்களுக்கு வேறு பல முக்கியமான வேலைகளும் உண்டு.
நமக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது இரண்டு கண்கள், இரண்டு காதுகள் போல தேவைக்கு அதிகமே ஆகும். ஆனால் சில சமயம் இரண்டு சிறுநீரகங்களுமே பழுது படும்போது அது நோயாகி விடுகின்றது. இப்படிப்பட்ட சிறுநீரக பழுது அல்லது செயலிழப்பு (ஆங்கிலத்தில் கிட்னி ஃபெயில்யர்) என்பது யாருக்கு வருகின்றது? இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.
கிட்னி ஃபெயில்யர் யார் யாருக்கு வரலாம்?
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் (முக்கியமாக சர்க்கரை கட்டுப்பாடில் இல்லாதவர்கள்), இரத்த கொதிப்பு உள்ளவர்கள். வயதானவர்கள், அடிக்கடி வலி மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், சில வகையான நாட்டுமருந்துகளை உட்கொள்பவர்கள், அடிக்கடி சூடு பிடித்து கொள்பவர்கள், அடிக்கடி சிறுநீரில் கற்களை வெளியேற்றுபவர்கள் ஆகியவர்களுக்கு கிட்னி ஃபெயில்யர் வரலாம். இதைத் தவிர 35 வயது தாண்டிய யாரும் சர்க்கரை, கொலஸ்ட்ரால் போல இரத்தம் மற்றும் சிறுநீரை பரிசோதித்து சிறுநீரகங்களின் ஆரோக்யத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சில வகையான கிட்னி ஃபெயில்யர் முழுமையாக குணப்படுத்த கூடியவை. இதைப் பற்றி ஒரு சிறுநீரக மருத்துவர் (கிட்னி ஸ்பெஷலிஸ்ட்) தெளிந்துரைப்பார். குணப்படுத்த முடியாத ஆனால் சிகிச்சை செய்து பெருமளவு சரி செய்யக் கூடிய நாள்பட்ட கிட்னி ஃபெயில்யர் பற்றி இனி பார்ப்போம்.
சோர்வு, தளர்ச்சி, இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம் எலும்புகளில் வலி, ருசியின்மை, பசியின்மை, தூக்கமின்மை, தோல் கறுத்தல், நமைச்சல், வாந்தி, விக்கல், உடல் வீக்கம், மூச்சிறைப்பு, மயக்கம், சிறுநீர் குறைவு சிலருக்கு சிறுநீர் அதிகம், அடிக்கடி போதல் என கிட்னி ஃபெயில்யர் பலவிதமாக வெளிப்படலாம். இன்னும் பலருக்கு பொதுவான அல்லது வேறு வியாதிகளுக்கு வேண்டி செய்த இரத்த, சிறுநீர் பரிசோதனைகளில் அது கண்டு பிடிக்கப்படலாம்.
கிட்னி ஃபெயில்யர் உள்ளதாக சந்தேகப்படுவர்களுக்கு இரத்தத்தில் யூரியா, கிரியியேட்டினின் முதலான கழிவு உப்புகளின் அளவு, சிறுநீரில் புரதச்சத்து, இரத்த அணுக்கள் ஆகியன சோதனை செய்யப்படும். சிலருக்கு வேண்டி வந்தால் 24 மணி நேர சிறுநீர் பரிசோதனைகள், சிறுநீரகங்களுக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கான் முதலிய சோதனைகள் செய்யப்படும்.
செய்ய வேண்டிய முறைகள்
கிட்னி ஃபெயில்யரில் பல வகைகளும் பல கட்டங்களும் உள்ளன. இந்த வகை நோயாளிகள் உடனடியாக ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அவரால் மட்டுமே சிறுநீரக நோயின் தன்மை, செயலிழப்பு எந்த படியில் உள்ளது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை என்பது தேவைப்படுமா இல்லையா என்பது போன்ற பல கேள்விகளுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியும். மேலும் சிறுநீரகங்களின் செயல்பாடு குறைந்து கொண்டே வருபவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் என்பதுக்கு நன்கு முன்பே அதற்கான சில ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கிட்னி ஃபெயில்யரால் உண்டாகும் சில விளைவுகள் உள்மறையாக இரத்தக் குழாய்கள் மற்றும் இருதயத்தை பாதிக்க கூடும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், இரத்த அளவை அதிகரிக்கும் சிகிச்சை செய்தல், கொழுப்பு சத்தை கட்டுபடுத்தல் ஆகியவற்றின் மூலம் இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு இவைகள் வராமல் தடுக்கலாம். மேலும் பல வகையான மருந்துகளும் கிட்னி ஃபெயில்யர் உள்ளவர்களுக்கு தவிர்க்கவோ அல்லது குறைத்த அளவில் கொடுக்கவோ வேண்டி வரும். இவை அனைத்தையும் நன்கு அறிந்து சரியான வைத்தியம் அளிக்க கூடிய ஒரு சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பில் இத்தகைய நோயாளிகள் இருக்க வேண்டியது எல்லாவற்றையும் விட முக்கியம்.
ஆரம்ப நிலை உதா:- கிரியேட்டினின் அளவு 2-6 வரை உள்ளவர்களுக்கு வெறும் மருந்துகள் ஆகார மாற்றம் முறையான இடைவெளிகளில் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக செயலிழப்பை தடுத்து நிறுத்தலாம் அல்லது பல வருடங்களுக்கு தள்ளி போடலாம். இதற்கு ஒரு நல்ல சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பில் இந்நோயாளிகள் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமாக இவர்கள் நாட்டு மருத்துவர்களை நம்பி முறையான வைத்தியம் செய்து கொள்ளாதது மட்டுமல்ல சிறுநீரகத்திற்கு ஊறு விளைவிக்கும் மருத்துவங்களை மேற்கொள்வதால் ஓரளவு வேலை செய்து கொண்டிருந்த சிறுநீரகங்கள் கூட சீக்கிரத்தில் அவைகளின் செயல் திறனை இழந்து முற்றிய நிலைக்கு தள்ளப்பட்டு டயாலிசிஸ் உடனே செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. என்றாலும் சிலருக்கு முறையான சிகிச்சை இல்லாததாலோ அல்லது மருத்துவரிடம் வரும்போதே நோய் முற்றிய நிலையில் வரும் போதோ டயாலிசிஸ் சிகிச்சை அவசியமாகி விடுகின்றது.
இது டயாலிசிஸ் தேவைப்படும் எல்லாருக்கும் பொருந்தாது. ஏற்கனவே மிதமான கிட்னி ஃபெயில்யர் இருந்தவர்களுக்கு சில இடைப்பட்ட காரணங்களால் (உதா:- சிறுநீர்ப்பை, நுரையீரல் இவைகளில் கிருமி தாக்குதல், வலி மாத்திரை, நாட்டு மருந்துகள் உட்கொள்ளுதல்) அது திடீரென்று பல மடங்கு அதிகரித்து டயாலிசிஸ் தற்காலிகமாக தேவைப்படலாம். இவர்களின் மூல நோய்களை கண்டறிந்து சரியாக சிகிச்சை அளித்தால் மீண்டும் டயாலிசிஸ் இல்லாமல் இவர்களை பல வருடங்கள் வாழ வைக்க முடியும்.
1. ஹீமோடயாலிசிஸ் (HEMODIALYSIS) எனப்படும் செயற்கை சிறுநீரக இயந்திரம் மூலம் இரத்தத்தை வெளியே எடுத்து சுத்தம் செய்து மீண்டும் உள்ளே செலுத்துதல். இதை வாரம் 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். மாதாந்திர செலவு சுமார் 10 முதல் 15 ஆயிரம்
2. பெரிடோனியல் டயாலிசிஸ் (CONTINUOUS AMBULATORY PERITONEAL DIALYSIS-CAPD) எனப்படும் வயிற்றினுள் ஒரு குழாய் மூலம் சுத்தீகரிப்பு திரவத்தை செலுத்தி வைத்திருந்து சில மணி நேரம் கழித்து வெளியே எடுத்தல். இதை தினம் 4-5 முறை செய்ய வேண்டும். இதனை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதற்கு உத்தேசமாக 20 முதல் 25 ஆயிரம் ரூ. மாதம் தேவை. இவ்விரு வகை சிகிச்சையின் போதும் சாப்பிட வேண்டிய நீரின் அளவு, உப்பு, மேலும் பல ஆகார கட்டுப்பாடுகள் இருக்கும். இதைத் தவிர இவ்விரு சிகிச்சைகளின் போதும் இரத்தம் விருத்தியாக எரித்ரோபோய்ட்டின் மற்றும் இரும்பு சத்து ஊசிகள், எலும்புகள் பலமிழக்காது இருக்க கால்சிட்ரியால் மாத்திரை இவைகளும் எடுத்து கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு ஆகும் செலவுகள் தனி.
3. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (KIDNEY TRANSPLANTATION)
மேற்கூறிய இரண்டு சிகிச்சைகளை விட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மிக சிறந்ததாகும். கிட்னி ஃபெயில்யர் நோயாளிக்கு உடல் மற்றும் உள்ளம் தகுதியாக இருந்து அவருக்கு பொருந்தும் வகையில் இரத்த வகை உள்ள அவரது உறவினர் அல்லது விபத்தில் இறந்த நபரின் உறவினர்கள் மனமுவந்து சிறுநீரக தானம் தர முன் வந்தால் இவருக்கு ஒரு சிறுநீரகத்தை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் பொறுத்துவதன் மூலம் மீண்டும் பழைய முழு ஆரோக்யமான நிலைக்கு இவரை கொண்டு வர முடியும்.
மேலும் டயாலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதோ, இரத்த விரத்திக்காக விலை உயர்ந்த மருந்துகளோ தேவையிருக்காது. மற்றும் ஆகார கட்டுப்பாடு பெருமளவு தளர்த்தப்பட்டு அநேகமாக எல்லா உணவு வகைகளையும் உண்ணவும் முடியும். இதற்கு ஆரம்பத்தில் சிறிது அதிகமாக செலவானாலும் அது ஒரு கிட்னி ஃபெயில்யர் நோயாளி டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஒரு வருடம் செலவிடும் தொகைதான் என்று நோக்கும் போது அதிகமில்லை. இதை தொடர்ந்து இவர்கள் வாழ்நாள் முழுவதும் மாற்றி பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை உடல் தள்ளி விடாமல் இருக்க சில மருந்துகள் சாப்பிட வேண்டி இருக்கும். ஆரம்பத்தில் இவற்றின் செலவு சிறிது கூடுதலாக இருந்தாலும் 1 முதல் 2 வருடங்களுக்குள் மருந்துகள் வெகுவாக குறைக்கப்பட்டு செலவும் குறைந்து விடும் என்றாலும் இந்த சிகிச்சை எல்லாராலும் முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் சிறுநீரக தானம் தர யாரும் இல்லாதது அல்லது முன் வராததுதான். நல்ல ஆரோக்யமான உடல் நிலையில் உள்ள இரு சிறுநீரகங்களும் நன்கு இயங்குவதாக பரிசோதித்து அறியப்பட்ட ஒருவர் ஒரு சிறுநீரகத்தை தானம் தருவதால் அவருக்கு எந்த வகையிலும் உயிருக்கோ மற்ற வகையிலோ ஆபத்து வர எந்த வாய்ப்பும் இல்லை என்பது இதுவரை உலகின் பல்வேறு நாடுகளிலும் நடந்த பல்லாயிரக்கணக்கான சிறுநீராக தானம் தந்தவர்களை பரிசோதித்து பார்த்ததில் நன்கு நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை.
ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
பாட்டி வைத்தியக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள...