অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வங்கிகள் வழங்கும் ஆன்லைன் சேவைகள்

வங்கிகள் வழங்கும் ஆன்லைன் சேவைகள்

வங்கிகள் வழங்கும் ஆன்லைன் சேவைகள்

வங்கிக்குப் போய், டோக்கன் வாங்கி, நம் வரிசை எண் வருகிற வரை காத்துக்கிடந்து, பணத்தைப் பெற்று, வீட்டுக்கு வருவதற்குள், ஒரு மணி நேரம் முதல் அரை நாள் போய்விடும். ஆனால், ஏ. டி. எம். வசதி வந்தபிறகு இன்றைக்கு ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுத்துவிட முடிகிறது. இன்றைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேலே பணம் எடுக்கவேண்டும் என்றால் மட்டுமே வங்கிக்குச் செல்கிறோம்.

ஏ.டி.எம். வசதி மாதிரி, இன்று வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தினால், உங்கள் காரியங்களை இருந்த இட த்தில் இருந்தபடி எளிதாகச் செய்து முடிக்கலாம். இதனால் நேரமும் மிச்சம்; அலைச்சலும் இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்திச் சேமிக்கவும் செய்யலாம்.

பலவிதமான ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பெறுவதற்கு, ஆன்லைன் வசதி பெற்றிருப்பது அவசியம். ஆகவே, நீங்கள் ஏற்கெனவே வங்கியில் கணக்கு வைத்திருந்து உங்களிடம் ஆன்லைன் பேங்கிங் / இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லையென்றால், உடனடியாக உங்கள் வங்கி மேலாளரை அணுகி ஆன்லைன் வசதிக்கு உண்டான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள்.

சில வங்கிகளில் உடனடியாக யூஸர் ஐடி (User ID) மற்றும் பாஸ் வேர்டை (Password) தருகிறார்கள் . சில வங்கிகளில் ஓரிரு வாரத்தில் தருவார்கள். நீங்கள் புதிதாக கணக்கு ஆரம்பித்திருந்தால் ,  ஆன்லைன் வசதிக்கு ‘ஆம்’ என்று டிக் செய்து கொடுங்கள். இந்த ஆன்லைன் பேங்கிங் வசதியைப் பெறுவதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடி நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

பேலன்ஸ் எவ்வளவு?

நம் அக்கவுன்டில் எவ்வளவு பணம் பேலன்ஸ் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்தால், நம் அக்கவுன்ட் பாஸ்புக் கை வைத்து தெரிந்துகொள்ளலாம். கடைசியாக பணம் எடுத்தது / போட்டது போன்ற விவரங்கள் பற்றி பாஸ்புக்கில் என்ட்ரி செய்திருந்தால் மட்டுமே சரியான பேலன்ஸ் தொகையை அறிய முடியும். வங்கிக்கு செல்வதே குறைந்துவிட்ட இந்தக் காலத்தில் இதற்கான வாய்ப்பு குறைவுதான். இன்னொரு வழி, பக்கத்தில் உள்ள ஏ.டி.எம்-க்கு சென்று பேலன்ஸை பார்ப்பது. அவ்வளவு ஏன் கஷ்டப்படுவானேன்?   உங்களிடம் ஆன்லைன் பேங்கிங் வசதி இருந்தால், அரை நிமிஷத்தில் உங்கள் கம்ப்யூட்டர் மூலம் பார்த்து விடலாம். தவிர, உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்துள்ளதா, நீங்கள் தந்த காசோலை பாஸாகி விட்டதா என்பதுபோன்ற அனைத்து விவரங்களையும் பார்த்துக்கொள்ளலாம். தவிர, கடந்த சில நாட்கள் முதல் பல வருட ஸ்டேட்மென்ட்களை ஆன்லைன் மூலமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

ஆர்.டி. மற்றும் டெபாசிட் ஓப்பனிங்

ஆன்லைன் மூலம் நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி. போன்ற அக்கவுன்ட்களை திறந்து முதலீடு செய்யலாம். அதேபோல, அந்த அக்கவுன்ட்களை ஆன்லைன் மூலமே மூடவும் செய்யலாம். குறிப்பாக, வெளியூர் / வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்.

பணப் பரிவர்த்தனை

இந்தியாவில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் ஆன்லைன் மூலமாகவே பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். ஒரே வங்கியில் வைத்திருக்கும் பல கணக்குகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம் / பெறலாம். வெவ்வேறு வங்கிகளுக்கு இடையில் உள்ள கணக்குகளுக்குப் பணத்தை மாற்றும்போது, ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் பகல் நேரங்களில் (திங்கள் – வெள்ளி – காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை; சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை) பணத்தை மாற்றினால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பணம் மாறிவிடும். இந்தப் பணமாற்று முறைக்கு நெஃப்ட் (NEFT – National Electronic Fund Transfer) என்று பெயர். இது ரிசர்வ் வங்கியின் விதி முறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது.

நீங்கள் பணம் மாற்றும்முன் அந்த அக்கவுன்டின் விவரங்களை உங்களது ஆன்லைன் பேங்கிங் வசதியில் பதிவுசெய்து கொள்வது அவசியம். இந்த வசதி பெரும்பாலான வங்கிகளில் சற்று முந்தைய காலம் வரை இலவசமாக இருந்தது. சில வங்கிகள் தற்போது ஒவ்வொரு மாற்றலுக்கும் ஒரு சிறிய தொகையைக் கட்டணமாக வசூலிக்கின்றன. சில வங்கிகள் இன்னும் இந்த வசதியை இலவசமாகவே தந்துவருகிறது. நெஃப்ட்மூலம் மாற்றுவதற்கு குறைந்தபட்ச/உச்ச பட்ச அளவு என்று ஏதும் இல்லை. வங்கியைப் பொறுத்து, உங்களின் அக்கவுன்டைப் பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. இன்று, இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் இந்தச்சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன.

உடனடி பணபரிமாற்றம்

எனக்கு உடனடியாகப் பணம் தேவை என்கிறீர்களா? அதற்கும் வசதி உள்ளது. அந்த வசதி ஆர். டி. ஜி. எஸ். (RTGS – Real Time Gross Settlement) என்று அழைக்கப்படு கிறது. ரூ.2 லட்சத்திற்கு அதிகமான தொகையை இந்த வசதி மூலம் மாற்றலாம். போய்ச் சேரவேண்டிய அக்கவுன்டிற்கு ஒரு சில மணித் துளிகளில் சென்று சேர்ந்துவிடும். இந்த முறையிலான பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் உண்டு. ரிசர்வ் வங்கியின் வரைமுறைபடி, 5 லட்சத்திற்குள் இருக்கும் பணப் பரிமாற்றத்திற்கு ரூ.30-க்கு மிகாமலும், அதற்குமேல் உள்ள ஒவ்வொரு பணமாற்றத்திற்கும் ரூ.55-க்கு மிகாமலும் வங்கிகள் கட்டணத்தை வசூலிக்கலாம்.

மொபைல் மற்றும் டி.டி.ஹெச். ரீசார்ஜ்

பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை ஆன்லைன் பேங்கிங் மூலம் மொபைல் போனிற்கு மற்றும் டி.டி.ஹெச்-ற்கு (DTH) பணம் ரீ சார்ஜ் செய்யும் வசதியையும் வழங்குகின்றன. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் ரீசார்ஜ் செய்யும் தொகை எடுத்துக்கொள்ளப்படும். ரீசார்ஜ் உடனடியாக ஆகிவிடும்.

டிக்கெட் புக்கிங் – ஷாப்பிங்

ஆன்லைன் பேங்கிங் வசதி வைத்திருப்பவர்கள், ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றை ஆன்லைன் மூலம் புக் செய்வதுடன், ஆன்லைனில் வேறு பொருட்களையும் வாங்குவதற்கு வசதியாக இருக்கும். பஸ் அல்லது ரயில் டிக்கெட் வாங்குவதற்கு பல கி.மீட்டர் தூரத்துக்கு வண்டியில் போய், கால் கடுக்க நிற்பதை விட, உங்கள் வீட்டிலேயே ஐந்து நிமிடத்தில் வாங்கிவிடலாமே!

பில் பேமன்ட்

நமது நேரத்தில் பெரும்பகுதியை சாப்பிடுகிறது இந்த பில் பேமன்ட். டெலிபோன் பில், மாநகராட்சி வரி, வருமான வரி கட்டுவது என ஒவ்வொரு அலுவலகத்துக்கும் போய் காத்துக் கிடப்பதை விட உங்கள் வீட்டில் இருந்தபடியே அத்தனை வேலைகளையும் எளிதாகச் செய்து முடிக்கலாம். இன்ஷூரன்ஸ் பிரீமியத்தையும் கையோடு கட்டுவதோடு, புதிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் எடுக்கலாம். ஒரு முறை பதிவுசெய்தால் போதும், வேண்டிய போதெல்லாம் நீங்கள் ஆன்லைனில் சென்று பணத்தை உரிய நிறுவனத்திற்கு செலுத்தி விடலாம்.

3-இன்-1 அக்கவுன்ட்

பல வங்கிகள் ஆன்லைன் வசதி வைத்திருப்பவர்களுக்கு, வங்கி, டீமேட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஒரே அக் கவுன்டில் வைத்துக்கொள்வதற்கு வசதிசெய்து தருகின்றன. இந்த வசதிகளுக்கு ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன.

மல்டிபிள் அக்கவுன்ட்

ஒரே வங்கியில் ஒரே நபர்/ நிறுவனம் வைத்திருக்கும் பல கணக்குகளை (வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டு, லோன், டீமேட்) ஒரே யூஸர் ஐடி-யின் கீழ் கொண்டுவரும் வசதியையும் வங்கிகள் தருகின்றன. இதனால் பல கணக்குகளை ஒரே இடத்தில் சுலபமாகப் பார்த்துக் கொள்வதோடு, அவற்றுக்கிடையில் டிரான்ஸாக்ஷனும் செய்ய முடியும்.

மணி ஆர்டர்

சில வங்கிகள் இந்திய தபால் துறையுடன் கைகோத்து மணி ஆர்டரும் அனுப்பித் தருகின்றன. நீங்கள் உங்களது ஆன்லைன் அக்கவுன்டில் சென்று, மணி ஆர்டர் சென்று சேரவேண்டிய முகவரி மற்றும் தொகையைக் குறிப்பிட்டு விட்டால், சேரவேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் சென்று விடும்.

டிமாண்ட் டிராஃப்ட், செக்புக் ரிக்வஸ்ட்

ஆன்லைனில் உங்களுக்கு வேண்டிய டி.டி, செக்புக் போன்றவற்றுக்கு ஆர்டர் செய்யலாம். ஆன்லைனில் செய்வதால் உங்களுக்கு வந்து சேரவேண்டியது, கொரியர்மூலம் துரிதமாக வந்து விடுகிறது.

ஸ்டாப் பேமன்ட்

தவறுதலாக ஒருவருக்கு காசோலையைத் தந்துவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! ஆன் லைனில் சென்று ஸ்டாப்பேமன்ட்  ரிக்வஸ்ட் தந்து விடுங்கள். வங்கி உங்களது காசோலைக்கு பேமன்ட் செய்யாது. இதுபோன்ற சேவைக்கெல்லாம் கட்டணம் உள்ளது

பி.பி.எஃப் அக்கவுன்ட்

ஒரு சில வங்கிகள் சேமிப்புக் கணக்கோடு சேர்த்து ஆன்லைனில் பி.பி.எஃப் அக்கவுன்ட் வசதியையும் தருகின்றன. இதனால் பி.பி. எஃப். அக்கவுன்டிற்கு ஆட்டோமெட்டிக்காகச் செல்லுமாறு மாதாமாதம் செலுத்தவேண்டிய தொகையைப் போட்டு வைத்து விடலாம். பலருக்கும் பயன்படும் இந்த வசதி இல்லை என்றால், ஒவ்வொரு மாதமும் வங்கிக்குச் செல்வதற்கு பயந்தே பலர் பி.பி.எஃப். அக்கவுன்டில் பணம் போடாமல் விட்டுவிடுகிறார்கள்.

ஹோம்லோன் அக்கவுன்ட்

ஹோம்லோன் என்பது பலர் தங்களது வாழ்க்கையிலேயே எடுக்கும் மிகப் பெரிய கடன் ஆகும். பெரும் பாலானோர் அந்தக் கடனை சீக்கிரமாக அடைக்க விரும்புவதால், செலுத்த வேண்டிய இ.எம்.ஐ. தவிர, அவ்வப் போது முன்கூட்டியே பணம் கட்டுகிறார்கள். இப்படி பிரிபேமன்ட் செய்த பணம் சரியாக நம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருப்பார்கள். ஆகவே, நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத பிறவங்கிகள் / நிறுவனங்களிலிருந்து லோன் எடுத்திருந்தாலும், அவர்களிடம் ஆன்லைன் வசதி கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். ஆன்லைன்மூலம் வருமான வரிக்கான அசல் / வட்டிச் சான்றிதழ் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம்.

26AS ஸ்டேட்மென்ட்

வருமான வரி தொடர்பான இந்த ஸ்டேட்மென்டையும் ஆன்லைன் பேங்கிங் வசதி வைத்திருப்பவர்களுக்கு பல வங்கிகள் தருகின்றன. இந்த ஸ்டேட்மென்டில் நம் பெயரில் யார், யார் எவ்வளவு வருமான வரி பிடித்துள்ளனர், அட்வான்ஸ் டாக்ஸ் எவ்வளவு கட்டியுள்ளோம் என்பது போன்ற பல விவரங்கள் இருக்கும். நாம் வருமான வரித் தாக்கல் செய்யும்போது மிகவும் உதவியாக இருக்கும்.

இதுவரை நாம் பார்த்த இந்த ஆன்லைன் சேவைகளை எல்லா வங்கிகளும் அளித்து விடுவதில்லை. தவிர, ஆன்லைன் வசதியை பல வங்கிகள் இலவசமாக அளித்தாலும், சில வசதிகளுக்கு சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றன. ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்துவதற்குமுன் அதற்கான கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் பேங்கிங் வசதியை பயன்படுத்துவது எப்படி?

  1. உங்கள் யூஸர் ஐ.டி மற்றும் கடவுச் சொல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
  2. நெட்சென்டர்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் உங்களது ஆன்லைன் வங்கி அக்கவுன்டை திறந்து பார்க்காதீர்கள்.
  3. உங்களது சொந்த கணினியின் மூலமே ஆன்லைன் அக்கவுன்டை உபயோகியுங்கள்.
  4. உங்களது கணினியிலும் ஆன்டிவைரஸை அப்டேட்டாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஆதாரம் :  இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate