অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961

நிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961

நிலசிர்திருத்தம், பசுமைப் புரட்சி

நிலசிர்திருத்தமும், பசுமைப் புரட்சியும் தமிழ்நாட்டு விவசாயத்தில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எந்த நாடும் நவீன வளர்ச்சி அடைய வேண்டுமெனில் அந்நாட்டில் முதலில் நிலம் பற்றிய பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். நிலக்குவியல் தடுக்கப்பட்டு உழுபவர்களுக்கு நிலம் என்ற ஜனநாயகம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். இது நிலப்பிரபுத்துவத்தை ஒழிப்பது பற்றிய பிரச்சனை மட்டுமல்ல; நவீன தொழில் வளர்ச்சிக்கு அவசியமான முன்தேவையும் ஆகும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது வெகு காலத்துக்கு முன்பே சாதிக்கப்பட்டுவிட்டது.

இந்த முதல் முன்தேவையை, இந்திய விடுதலைக்குப் பின் நிலசிர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அரசு நிறைவு செய்ய முயன்றது. மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பில் நிலசிர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்தியா முழுதும் ஒரே மாதிரியான நிலசிர்திருத்தம மேற்கொள்ளப்படவில்லை. முழுமையான நிலசிர்திருத்தம் மூலம் உழுபவர்களுக்கு நிலம் அளித்த கேரளா, மேற்கு வங்களாம் தவிர கர்நாடகத்திலும், தமிழகத்திலும் நில சிர்திருத்தங்கள் 1960-70 களில் மேற்கொள்ளப்பட்டன. பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலப்பிரபுத்துவம் சார்ந்த நிலக்குவியல் முறை இன்னமும் பலமாகவே உள்ளது.

இந்தியாவின் பொதுவான பொருளாதார வளர்ச்சிப்பாதை முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை. விடுதலைக்குப் பிந்தைய ஆண்டுகளில் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் இந்திய சமூக அமைப்பு - உற்பத்தி முறை முதலாளித்துவ தன்மை உடையதாக மாற்றப்பட்டது. நில சிர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களில் விவசாயத்தில் முதலாளித்துவ மாற்றங்கள் வேகமடைந்தன. இத்தகைய மாநிலங்களில் பசுமைப் புரட்சி முதலாளித்துவ விவசாய முறையை - புதிய விவசாய வர்க்கங்களை உருவாக்குவதில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டது.

பீகார் போன்ற மாநிலங்களில் நிலக்குவியல் நிலப்பிரபுத்துவ அடிப்படையிலேயே இன்னமும் நீடிப்பதால் அந்த மாநிலத்தின் பொதுவான வளர்ச்சி தடைப்பட்டுப் போனது. இதன் காரணமாக, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியில் வலுவான நிலப்பிரபுத்துவ மிச்சங்கள் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன.

இந்திய விவசாயத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், சமத்துவமான நிலப்பகிர்வு மூலம் கிராம சமுதாயத்தில் பலவீனப் பிரிவினரின் சமூக நீதியை பாதுகாக்கவும் ஆன நோக்கங்களைக் கொண்டே இந்தியாவின் நிலசிர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பண்ணையின் அளவுக்கும், உற்பத்தி திறனின் வளர்ச்சிக்கும் இடையில் உள்ள தொடர்பைப் பற்றிய பல ஆய்வுகள் - விவாதங்கள் நடைபெற்றுள்ளன. நில உடமை முறையில் நிலக்குவியல் ஏற்படாமல் உச்சவரம்பு விதித்து உபரி நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் நிலமற்ற ஏழை விவசாயிகள் அந்த உபரி நிலங்களைப் பெற்று அந்த நிலங்களின் உடமையாளன் என்ற வகையில் உற்பத்தித்திறனை பெருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே நிலசிர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய நிலசிர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 55 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இது குறித்து மாநிலவாரியான ஆய்வை முசோரியில் உள்ள நிர்வாகம் குறித்த லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாடமி (LBSNAA) மேற்கொண்டு மாநிலவாரியாக நூல்களை வெளியிட்டு வருகிறது. இந்திய அரசின் கிராம வளர்ச்சித்துறையின் ஆய்வு திட்டமாக இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகார், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியானா, மத்தியபிரதேசம், குஜராத், மகாராட்டியம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலசிர்திருத்தம் குறித்த ஆய்வுகள் இதுவரை எட்டு தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் நிலசிர்திருத்தம் - முடிவடையாத கடமை" என்ற தலைப்பில் (2003) தமிழ்நாடு பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

நூலில் 16 ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்நாட்டு நிலசிர்திருத்தத்தின் பல அம்சங்களை ஆராய்கின்றன. நிலசிர்திருத்தம் குறித்த பல கண்ணோட்டங்களைக் கொண்டதாக நூல் அமைந்துள்ளது. ஆனாலும், நிலம் பற்றிய பொருளாதாரத்தின் பிரச்சனைகளை துல்லியமான விவரங்களுடன் கட்டுரைகள் ஆராய்கின்றன.

கேரளா மற்றும் மேற்கு வங்காளத்துக்கு அடுத்ததாக நிலக்குவியல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட மூன்றாவது இந்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டு நிலசிர்திருத்தத்தின் போக்கில் ஏற்பட்ட பிரச்சனைகளையும், நிலசிர்தருத்த தன்மையில் ஏற்பட்ட குறைபாடுகளையும் இந்த நூல் துல்லியமாக ஆராய்கிறது.

"உழுபவருக்கே நிலம்" என்ற முழக்கத்தின் அடிப்படையில் நிலசிர்திருத்தத்துக்கான விவசாயிகள் இயக்கத்தைத் தொடங்கியது கம்யூனிஸ்ட் இயக்கம் தான். அகில இந்திய விவசாயிகள் சங்கம் நிலக்குவியலுக்கு எதிரான வலுவான கிளர்ச்சிகளை நடத்தியது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசிய இயக்கத் தலைமை நிலசிர்திருத்தத்தின் அவசியத்தை ஏற்றுக்கொண்டது. விடுதலைப் போராட்ட காலத்திலும், அதன் பின்னரும் பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, வங்காளம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் நடத்திய கிளர்ச்சியின் பலனாகவும், நிலசிர்திருத்தம் முதலாளித்துவ திசையிலான சந்தை உருவாக்கத்துக்கு அவசியம் என்ற வகையிலும் இந்தியாவெங்கும் நிலசிர்திருத்தம் மத்திய - மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டது.

நிலசிர்திருத்தம் மாநில அரசுகள் பொறுப்பில் விடப்பட்டதால் ஒரே சிரான அகில இந்திய அணுகுமுறை ஏற்படவில்லை. இடதுசாரிகள் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முன்னோடியான நிலசிர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலசிர்திருத்தங்களும் இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி நிறைவேறி இருக்க முடியாது என்ற உண்மையை உண்மை என்ற அளவுக்காவது நூலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அரசின் ஆய்வு திட்டத்தின் அடிப்படையிலான ஆய்வுகள் என்பதாலோ என்னவோ இந்த உண்மை பதிவு செய்யப்படவே இல்லை. வினோபாவின் பூமிதான இயக்கம், சர்வோதயாவின் முயற்சிகள் மட்டும் தனியே குறிப்பிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 1936 தொடங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிலப்பிரபுத்துவ நிலக்குவியலை எதிர்த்து - ஒடுக்கப்பட்ட விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பெருமளவில் திரட்டிப் போராடியது. விவசாய அரங்கத்தில் விவசாயிகள் "வர்க்கமாக" திரட்டி நிலப்பிரபுத்துவ ஏற்பாட்டின் அடிப்படைகளை வீழ்த்துவதற்கான போராட்டத்தை பி. சினிவாசராவ் நடத்தினார். காவிரி பாசனப் பகுதியிலும், தென் மாவட்டங்களிலும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான "கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகள்" வலுவான தளங்களில் செயல்பட்டது. 1970 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலான "நிலமீட்சிப் போராட்டம்" தமிழகத்தில் பெரிய அரசியல் வீச்சை ஏற்படுத்தியது. உபரி நிலங்கள் உழுபவருக்கே வினியோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீது விவசாயிகள் இயக்கம் நடைபெற்றது. குத்தகை சாகுபடியாளர் பாதுகாப்பு குறித்த வலுவான விவசாய இயக்கமும் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டது. மாநில ஆட்சியாளர்களுக்கு இவை ஏற்படுத்திய அரசியல் நிர்பந்தங்கள் காரணமாகவே தமிழகத்தில் நில சிர்திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன; குத்தகை - வார சாகுபடியாளர் பாதுகாப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை குறித்தெல்லாம் இந்த நூல் போகிற போக்கில்கூட குறிப்பிடாமல் மௌனம் சாதிக்கிறது.

நில சிர்திருத்த சடங்களின் பிரிவுகள்

  1. நில உடமைக்கான உச்சவரம்பு நிர்ணயித்து உபரி நிலத்தை அரசு எடுத்து நிலமற்றவர்களுக்கு வினியோகிக்க வகை செய்யும் சட்டங்கள்.
  2. நிலத்தில் சாகுபடி செய்யும் வார - குத்தகை விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பது குறித்த சட்டங்கள்.

தமிழ்நாடு நிலசிர்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961ல் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டார்டு ஏக்கர் என நில உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இந்த 1970 - ல் திருத்தப்பட்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் 15 ஏக்கராக குறைக்கப்பட்டது. இது மறுபடியும் 1972 ல் திருத்தப்பட்டது. நிலசிர்திருத்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி பினாமி உடமை மாற்றங்களை செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பினாமி மாற்று தடுப்பு சட்டம் 1988இல் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டது? இது பினாமி மாற்றங்களை கிரிமினல் குற்றமாக அறிவித்து அத்தகைய பினாமி மாற்றங்களுக்கு மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதித்துள்ளது.

ஆனால், பெருநில உடைமையாளர்களின் பினாமி நிலமாற்றமும், போலி நில விற்பனையும் 1958 தொடங்கியே சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பெருமளவு நடத்தப்பட்டிருக்கிறது. நிலசிர்திருத்தம் குறித்த அரசு நிர்வாகத்தின் மெத்தன போக்கு இதற்கு முக்கியமான காரணமாகும். அத்தகைய பினாமி நிலமாற்றங்களைக் கண்டறிய அரசியல் சாசனத்திலேயே தகுந்த திருத்தங்கள் செய்யப்படவேண்டும் (பக்கம்108) என ஒரு கட்டுரை யோசனை கூறுகிறது.

காரணங்கள்

  1. நிலசிர்திருத்தத்தை எதிர்பார்த்து முன் கூட்டியே செய்யப்பட்ட நில விற்பனை.
  2. நிலசிர்திருத்த சட்டத்தில் காணப்படும் விலக்குகள்.
  3. முறையீடு குறித்த விதிமுறைகளின் குளறுபடிகள்.
  4. நீதிமன்றங்களின் அணுகுமுறை.
  5. நிர்வாகத்தின் பலவீனமும், ஊழலம்.
  6. ஆவணங்களில் காணப்படும் தகவல் குறைபாடுகள்.

பினாமி நிலமாற்றங்கள் நில உடமையாளர்கள் டிரஸ்டுகளை துவக்கி அதில் தமது நிலத்தை பதிவு செய்துகொள்வதன் மூலம் பெருமளவு நில உச்சவரம்பிலிருந்து தப்பித்துக்கொள்வது நடைபெற்று உள்ளது. தஞ்சை மாவட்டம் வனவளம் தேசிகர் பெயரில் இவ்வகையில் 600.05 ஏக்கர் நில உச்சவரம்புக்கு உட்படாமல் தப்பித்தது (பக்கம் 78).

வேளாண் தொழில் புரியாத நிலத்தை மட்டும் குவித்துக் கொண்டு அதன் மூலமான நிலப்பிரபுக்களாக (Absentee Landlordism) உள்ளவர்கள் அவர்களின் நிலம் அமைந்துள்ள கிராமத்தில் வாழாமல் நகரத்தில் வாழ்ந்து கிராம உற்பத்தியின் வருவாயை நகர் சார்ந்த நுகர்வுக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். இது நில சிர்திருத்த சட்டங்களில் காணப்படும் பலவீனங்களின் விளைவாகும்.

தமிழ்நாட்டு நில உடமை முறையில் இன்னமும் வலுவான நிறுவன நிலப்பிரபுவாக உள்ளது கோயில்களும், மடங்களும் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களுக்கும், மடங்களுக்கும் சொந்தமாக சுமார் 6,50,000 ஏக்கர் நிலம் உள்ளது (பக்கம் 156). நிலசிர்திருத்த சட்டங்களின் ஒன்றான Public Trust Act கோயில்களும், மடங்களும் தமது சொந்த விவசாயத்துக்கு 20 ஸ்டாண்டார்டு ஏக்கரை வைத்துக் கொள்ளலாம் என அனுமதிக்கிறது. ஆனால் தருமபுரம் ஆதீனம் தமது சொந்த வேளாண்மைக்கு 3,500 ஏக்கரை வைத்துள்ளது. அறந்தாங்கி ஆவுடையார் கோயிலில் 45 கிராமங்களின் 8,000 ஏக்கர் திருவாடுதுறை ஆதீனத்தின் சொந்த வேளாண்மைக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 8,952 கோயில்களும், அதற்கு வெளியே 1568 கோயில்களும் ஆக மொத்தம் 10,520 கோயில்கள் பெரிய நில உடமைக் கோயில்களாக உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. 1987 அறிக்கைபடி நிலம் உள்ள கோயில்கள் தமிழகத்தில் சுமார் 35,000. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் (ஒன்றுபட்ட தஞ்சை) மூன்றில் ஒரு பகுதி சாகுபடி நிலம் கோயில்களிடமும், மடங்களிடமும் உள்ளது. மொத்த சாகுபடி நிலத்தில் பாதிமட்டும்தான் சிறு நிலவுடமையாளரிடம் உள்ளது (பக்கம் 163). மதத்தின் பெயரால் ஏற்பட்ட இந்த நிலக்குவியல் நிலசிர்திருத்த சட்டங்களால் அகற்றப்படவில்லை. தமிழ்நாடு நிலசிர்திருத்த சட்டங்கள் அனைத்தும் இந்த நிலங்களுக்கு நில உச்சவரம்பு சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்துவிட்டது. மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயற்றப்பட்ட நிலசிர்திருத்த சட்டங்கள் கோயில் - மடங்களின் நிலங்களையும் நில உச்சவரம்புக்குள் கொண்டு வருகின்றன. ஆனால், 1961 - காங்கிரஸ் ஆட்சிக்கால நிலசிர்திருத்தமும், அதன் பின்னர் வந்த திராவிட இயக்க அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கால நிலசிர்திருத்தமும் இந்த நிலக்குவியலை விதிவிலக்கு கொடுத்து காப்பாற்றி விட்டன.

இந்த நிலங்களில் குத்தகை தாரராக விவசாயம் செய்பவர் வேளாண் உற்பத்திக்கும், நிலத்தை மேம்பாடு செய்வதற்குமான வங்கிக் கடனைப் பெறுவதில் சிக்கல் உள்ளது. அதற்கான ஆவணங்களில் கோயில்களும் - மடங்களும் கையெழுத்திடுவதில்லை. நீண்டகாலக்கடன் இத்தகைய குத்தகை விவசாயிகளுக்கு இதனால் கிடைப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் பயிர்கடன் மட்டும் பெறலாம் என்ற நிலையே உள்ளது. இதன் காரணமாக நிலத்தின் உற்பத்தி திறன் பெரிதும் பாதிக்கப்பட்டு கோயில் - மடங்கள் கட்டுப்பாட்டில் பின்தங்கிய வேளாண் முறையே இந்த பிரதேசங்களில் தொடர்கிறது.

கோயில்கள் எவ்வளவு நிலத்தை தன் உடமையாகக் கொண்டிருக்கிறது என்று துல்லிமான விபரத்தை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிட்டதில்லை. கோயில் - மடங்களின் நிலக்குவியலும், நில சிர்திருத்த சட்டத்தின்படியே உருவாக்கப்பட்ட டிரஸ்டுகள் பலவும் காவிரி டெல்டா பிரதேசத்தில் நிலக்குவியல் தன்மையைக் கொண்டதாக உள்ளது. இப்பொருள் குறித்த சிவப்பிரகாசத்தின் ஆய்வுக் கட்டுரை தமிழ்நாடு நில உடமை முறையில் டெல்டா பகுதிகளில் இன்னமும் நிலசிர்திருத்தம் சில முடிவடையாத கடமைகளைக் கொண்டுள்ளதை எடுத்துரைக்கிறது.

நிலம் தான் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நிலப்பகிர்வு ஒரு சமத்துவ சமுதாயத்தை கிராமங்களில் உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நிலம் சாதிய அமைப்போடு பிணைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாகவே சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதிகள் (SC) நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாகவே உள்ளனர். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீதம் 19.18 என இருக்கையில் மொத்த நிலத்தில் அவர்களது உடமை 7.1 சதவீதமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. நிலசிர்திருத்த சட்டத்தின் மூலம் பெறப்பட்ட உபரி நிலம் நிலமற்ற ஏழைகளுக்கு வினியோகிக்கப்பட்ட விபரம் கீழே அளிக்கப்படுகிறது.

ஆதாரம் : இந்தியாவின் சட்டங்கள்.

கடைசியாக மாற்றப்பட்டது : 6/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate