অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employee's Provident Fund) திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்-1952". இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.

நோக்கம்

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சில ஓய்வுக்கால ஆதாயங்களை வழங்குவதற்கும், அவர் இறந்து விட்டால் அவரை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு சில உதவிகளை வழங்குவதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துடன் தொழிலாளர்களுக்கு சேமிப்பு உணர்வையும் வளர்க்கிறது.

சட்டம் பொருந்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள்

இந்தியாவில் இருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் அட்டவணைப்படுத்தப்பட்ட தொழில்களில் முதல் அட்டவணையில் வரும் 160 தொழில்கள் செய்துவரும் தொழில் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்நிறுவனங்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தால் மட்டுமே இச்சட்டம் நடைமுறைப்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனங்களில் மாதச்சம்பளம் ரூ6500/-க்குக் குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும்.

சட்டம் பொருந்தாத தொழில் நிறுவனங்கள்

  1. கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்பட்டு கூட்டுறவுச் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 50 நபர்களுக்கும் குறைவாக இருந்தால் அத்தொழிற்சாலைகள் இச்சட்டத்தின் கீழ் வராது.
  2. 20 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் வராது.

வருங்கால வைப்புநிதி சார்ந்த திட்டங்கள்

வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைச் சார்ந்து மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. இதை இந்திய அரசு "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்" (Employee's Provident Fund Organisation) மூலம் செயல்படுத்தி வருகிறது.

  1. தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Employee's Provident Fund Scheme)
  2. தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம் (Employee's Family Pension Scheme)
  3. தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் (EPF Linked Insurance Scheme)

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதியாக தொழிலாளர்களும், தொழிற்சாலை நிர்வாகங்களும் தொழிலாளர்களின் பெயரில் மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். இதில் தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நிர்வாகம் அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இந்தத் தொகை முழுவதும் அந்தத் தொழிலாளர் பெயரில் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவிகித வட்டி அளிக்கப்படுவதுடன் அதுவும் வருங்கால வைப்பு நிதித் தொகையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம்

தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதியில் தொழிலதிபரின் நிதியாகவும் சேர்க்கப்படுகிறது.

தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்

தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 1.5 சதவிகிதத் தொகையை நிர்வாகம் தனியாக தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டத்திற்காகச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வைப்பு நிதித் திட்டத்திலுள்ள உறுப்பினர்களுக்கு சில ஆயுள் காப்பீட்டு சலுகைகள் வழங்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதித் திட்ட இடைக்கால பலன்கள்

  1. வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் வீடுகள் கட்டவும், வாங்கவும் கடன்களைப் பெற முடியும். ஆனால் இந்தக் கடன் பெறுவதற்கு அந்தத் தொழிலாளர் குறைந்தது இத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். உறுப்பினர் விண்ணப்ப்த்தின் அடிப்படையில் அவரது 24 மாத கால சம்பளம் மற்றும் படித் தொகை அல்லது வைப்பு நிதியில் அவர் செலுத்திய சந்தாத் தொகை (நிர்வாகம் செலுத்தியது கணக்கில் சேர்க்கப்படாது)மற்றும் வட்டி ஆகியவை கணக்கிடப்பட்டு இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். வீடு கட்டப்படும் பொழுது 12 மாதச் சம்பளம் முன்பணமாக வழங்கப்படும்.
  2. தொழிற்சாலை வேலை நிறுத்தம் அல்லது வேறு காரணங்களினால் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால் அல்லது தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளம் வாங்காமல் இருந்தால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர்கள் தொழிலாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் தொழிலாளர்கள் பங்குச் சந்தாத் தொகைக்கான வட்டித் தொகையை விட அதிகமில்லாதத் தொகையை உதவித் தொகையாக அளிக்கலாம். அவ்வாறு வழங்கப்பட்ட தொகையை அத்தொழிலாளர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. ஆறு மாதங்களுக்கு மேல் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் அத்தொழிலாளர்கள் சந்தாத்ந்தொகையில் பாதிக்கு அதிகமில்லாத தொகையினை கடனாக அளிக்கலாம். இக்கடன் தொகையைத் தொழிலாளர் பின்னர் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.
  3. உறுப்பினர் நோய்வாய்ப்பட்டு ஒரு மாத காலத்திற்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அல்லது முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்தால் இந்நிதியிலிருந்து திருப்பிச் செலுத்த வேண்டாத தொகையை உதவித்தொகையாகப் பெறலாம். ஆனால் இந்தத் தொழிலாளர் வேறு எந்தச் சட்டத்தின் கீழும் இதே வகை ஆதாயம் பெறவில்லை என்று நிர்வாகம் சான்று வழங்க வேண்டும்.
  4. எதிர்பாராத விதமாக ஏற்படும் இயற்கச் சீற்றத்தினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது விண்ணப்பத்தின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் உதவித் தொகை வழங்கலாம்.
  5. மின்வெட்டின் காரணமாக வேலை பாதிக்கப்படும் பொழுது வருமானத்தை இழந்து குறைந்த சம்பளத்தை பெறும் போது திருப்பித்தர வேண்டாத உதவித் தொகையைப் பெறலாம். இதற்கு மாநில அரசிடமிருந்து மின்வெட்டு குறித்த சான்றிதழும், சம்பளக் குறைவிற்கு மின்வெட்டுதான் காரணம் என்கிற நிர்வாகத்தின் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  6. உறுப்பினர்களின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கும், பெண் குழந்தைகளின் திருமணத்திற்கும் உதவித் தொகை பெற முடியும். ஏதாவது ஒரு குழந்தையின் மேற்படிப்புக்கு ஒரு முறையும், இரண்டு பெண்களின் திருமணங்களுக்கும் உதவித் தொகை பெற முடியும்.

வைப்பு நிதிக் கணக்கு முடித்தல்

தொழிலாளர்கள் கீழ்காணும் சில சூழ்நிலைகளில் வைப்பு நிதித் திட்டத்தில் தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு தங்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையும் பெற்றுக் கொள்ளலாம்.

  1. உறுப்பினர் ஓய்வு வயதை அடைந்து விட்ட பின்பு அல்லது ஓய்வு பெறும் பொழுது பெறலாம்.
  2. உடல் நிரந்தர தகுதியிழப்பினால் வேலை செய்ய இயலாமல் போகும் நிலையில் பெறலாம்.
  3. வேலை நீக்கம் அல்லது ஆட்குறைப்பால் வேலை இழக்கும் நிலையில் பெறலாம்.
  4. சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். இல்லையென்றால் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குப் பின்பு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று உறுதி அளித்து கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

ஆதாரம் : வருங்கால வைப்பு நிதி ஆணையம், சென்னை.

கடைசியாக மாற்றப்பட்டது : 7/11/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate