অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்

குழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும்

அறிமுகம்

குழந்தைத்தொழிலாளர் சட்டம் என்பது பிஞ்சு வயதினர் கடுமையான உழைப்பில் ஈடுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்கான உபாயங்களை மையமாகக்கொண்டு சுழல்வதாகும்.  சமுகத்தின் விதிமுறைகள் மக்களின் மனப்பாங்கு, நடத்தை, அவைகளின் வெளிப்பாடுகள் ஆகியவற்றைப் பாகுப்பாய்வு செய்யும் கருவியாக மட்டுமின்றி செய்கை, வழக்கங்கள், பாரம்பரியம் ஆகியவற்றிலிருந்து எழக்கூடிய சமூகத்தீங்குகளை குறைக்கச்செய்யும் கருவியாகவும் சட்டம் என்பது பார்க்கப்படுகிறது. நம்முடைய சமுதாயப் பொருளாதார அமைப்பில் ஆழமாகப் பின்னிப்பிணைந்திருக்கும் பிரச்சனையான  குழந்தைத்தொழிலாளர் பிரச்சனையைக் கையாள்வதில் சட்டத்தின் தலையீடு மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் குழந்தைத்தொழிலாளர் தேசியக்கொள்கை, சட்டப்பூர்வ நடவடிக்கைத் திட்டத்தை தனது மூன்று சேர்க்கை உறுப்புக்களில் ஒன்றாகப் பெற்றுள்ளது. பொதுவாக குழந்தைத்தொழிலாளர்களே இல்லாமல் செய்வதும், குறிப்பாக அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்படும் சிறார் தொழிலாளர்களை மீட்பதும் சட்ட நடவடிக்கைகளின் நோக்கமாகும். இந்த சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கக்கூடிய ஓட்டைகள், முன்னேற்பாடுகள் போன்றவற்றிலிருந்து விடுபட்டால்தான் இது ஒரு வலிமையான ஆயுதமாக தலைஎடுக்க முடியும்.

பன்னாட்டுத்தொழிலாளர் அமைப்பின் மாநாடு

குழந்தைத்  தொழிலாளர் (தடுப்பு ஒழுங்குமுறை சட்டம்) 1986, சிறார்களை எந்தவிதமான தொழிலிலும் உற்பத்தி நடைமுறைகளிலும் ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் நோக்கத்தை முக்கியமானதாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது இதன் மூலம் பள்ளிகளில் குழந்தைகளின் வருகை அதிகரித்தது. பதின் பருவத்தினர் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதைத் தடைசெய்வதற்கும் பன்னாட்டுத்தொழிலாளர் அமைப்பின் மாநாடு 138, 182 ஆகியவற்றின் கருத்திற்கேற்ப பதின்பருவத்தினரின் பணிவரன் முறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் இந்தத் திருத்தம் துணை செய்தது. பன்னாட்டு தொழிலாளர் மாநாடு எண் 138 இன் படி வேலைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயது கட்டாயப் பள்ளிக்கல்வியை முடிக்கவேண்டிய வயதிற்கும் குறைவானதாக இருக்கக்கூடாது.  எப்படிப்பார்த்தாலும் அவர்கள் 15 வயதிற்குக் குறைவானவர்களாக இருக்ககூடாது. பன்னாட்டுத் தொழிலாளர் மாநாடு எண் 182 மிக மோசமான நிலையில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியது.  இதில் காணப்படும் நிபந்தனை எண் 1 மோசமான நிலையில் இருந்து வரும் குழந்தைத்தொழிலாளர்களை உடனடியாக தடுத்தாட்கொண்டு மீட்கவும், அதற்கென எடுக்கப்பட வேண்டிய திறமையான நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கிறது. உழைக்கும் சிறார்களைக்கருத்தில் கொண்டு இந்தியச்சூழலில் குழந்தைத் தொழிலாளர் சட்டங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அண்மைக்கால சீர்திருத்தங்கள் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

குழந்தை தொழிலாளர்களின் நிலை

குழந்தைத் தொழிலாளர் என்ற சொல்லாட்சி ஒன்றுக்கு ஒன்று முரணான இரண்டு நேரெதிர் சொற்களைக் கொண்டுள்ளது. குழந்தை எனும் சொல் மென்மையையும் வெகுளியையும் குறிக்கிறது. தொழிலாளர் எனும் சொல் சுழன்று உழலும் உழைப்பைக்குறிக்கிறது. வரலாறு தெரிந்த காலம் முதலே குழந்தைகள் எப்போதும் உழைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.  வேலை, குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளவும், சமூகமயமாகும் வழிமுறைக்கு அவர்களுக்கு உதவவும் செய்கிறது. மிக இளம் வயதிலிருந்தே திறன்களைப்பழகிக் கொள்வதனால் பாரம்பரியத்திறன்கள் பாதுகாக்கப்பட்டு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செலுத்தப்படுகிறது என்ற சிந்தனை ஓட்டமும் இருக்கிறது. பணிபுரிவதில் உள்ள சாதகமான அம்சங்கள் குழந்தைகளை நீண்ட நேரத்திற்கு கட்டாயப்படுத்தி வேலை வாங்கும்போது தலைகீழாக மாறிப்போய் விடுகின்றன.  அவர்களின் அறிவாற்றலும் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. குழந்தைப்பருவம் அவர்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்படுகிறது.  கல்வியும் பிற உரிமைகளும் வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. வேலையில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தரப்படுகிறது. சில சமயங்களில் பெற்றோரும் உறவினர்களும் வாங்கி வைத்திருக்கும் கடன்களுக்காக வேண்டி ஊதியமே இல்லாமலும் இவர்கள் வேலைபார்க்கவேண்டி நேர்கிறது.  ஊதியம் பெறும் குழந்தைத்தொழிலாளர்கள், ஊதியமில்லாத குழந்தைத்தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக இருக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து உழைக்கும் குழந்தைத்தொழிலாளர்கள், சுயவேலை செய்யும் குழந்தைகள், வீட்டு வேலை / தொழிற்சாலை வேலைகள் பார்ப்போர் இடம்பெயரும் / இடம்பெயராக் குழந்தைத் தொழிலாளர்கள் என்று பல வகையான குழந்தைத்தொழில் வடிவங்கள் இருக்கின்றன.

உடல்நலக் குறைபாடு

வெவ்வேறு கால கட்டங்களில் நமக்கு கிடைத்துள்ள பல்வேறு தரவுகள் வேளாண்மை, கால்நடைவளர்ப்பு காடு, உற்பத்தித் தொழில், உணவுப்பதனம், சேலைத்துறைகள் போன்ற முறைசாராப் பொருளாதாரத்துறைகளில் சிறார்கள் வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றன. சில தொழில்களில் உற்பத்தியின் அனைத்துப் படிநிலைகளிலும் - மூலப்பொருள் சேகரிப்பது தொடங்கி பொருளைத் தயாரித்து முடிப்பதுவரை குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுகாதாரமற்ற சூழல்களில் பணிபுரிகின்றனர்.  நச்சு வேதிப்பொருள்கள் பூச்சிக்கடி, கிழே விழுவது போன்ற பல ஆபத்துக்களை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். பல்வேறு உற்பத்தி அலகுகளில் பணிபுரியும் இவர்கள் உலோகம் பிறவகை தூசுக்கள் நிறைந்த பாதுகபாப்பற்ற சூழல்களில் உள்ளனர்.  கண்ணாடி உற்பத்தித் தொழிலில் இருப்பவர்கள் ‘சிலிகோசிஸ்’ எனும் நோய்க்கும் ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் பலகைகள், தகடுகள் உற்பத்தியில் ஈடுபடுவோர் ‘ஆஸ்பெஸ்டாசிஸ்’ நோய்க்கும் பட்டு ஆடைத்தொழில், ஜவுளிகள், கம்பள உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடுவோர் நுரையீரல் ஆஸ்த்மா நோய்க்கும் பீடித் தொழில் செய்பவர்கள் காச நோய்க்கும், குப்பை பொறுக்கும் சிறார்கள் ‘டெட்டனஸ்’ நோய்க்கும், துணிகளில் பூத்தையல் வேலை பார்ப்போர் கண் நோய்களுக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன.  இவற்றில் சில நோய்கள் தீர்க்க இயலாதவை.

குழந்தைகள் பணிபுரியும் தொழில்களில் ஒரு எடுத்துக்காட்டு

உதாரணத்திற்கு பித்தளை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் சிறார்களைப் பற்றி பார்க்கலாம்.  பித்தனையை உருக்கி வார்க்கும் அச்சுக்களில் பணிபுரியும் சிறார்கள், உலையில் தீ தொடர்ந்து எரிவதற்காக ஒரு கைச்சக்கரத்தை விடாமல் சுழற்றிக் கொண்டே இருக்கவேண்டும். தரையில் புதைந்துள்ள உலையின் மூடியை அவ்வப்போது திறந்து உலோகம் உருகி இருக்கும் நிலையை கவனித்துவரவேண்டும். உருகிய பித்தளை வார்ப்புக்கு தயாராக உள்ள நிலையில் உலையின் வாயில் இருந்து நீல நிற, பச்சை நிறத் தீக்கொழுந்துகள் உயர்ந்து எழும். சிறார்கள் பிறகு, உருகிய பித்தளையைக் கொண்டிருக்கும் கலனை பெரிய இடுக்கிகளைக் கொண்டு உலையில் இருந்து தூக்கி வார்ப்புகளில் ஊற்ற வேண்டும். சூடாக உள்ள வார்ப்புகளைத் திறப்பதிலும், பித்தளைத்துண்டுகளை வெளியில் எடுப்பதிலும் பெரியவர்களுக்கு இவர்கள் உதவ வேண்டும்.  உலையில் கலனை வைப்பதற்கும் எடுப்பதற்குமாக இவர்கள் வெறும் காலுடன் உலை அருகே நிற்கின்றனர். இந்த வேலையைச் செய்யும் போது உலையில் இருந்து வெளியேறும் புகையையும். வாயுக்களையும் இவர்கள் சுவாசிக்கின்றனர். உலையின் வெப்பநிலை 1100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும்.  அதோடு மட்டுமின்றி, தீக்காயங்கள் கண்களில் ஏற்படக்கூடிய காயங்கள் ஆகியவற்றையும் சிறார்கள் எதிர்நோக்குகின்றனர்.

பித்தளைத் துண்டுகளை பளபளப்பாக்கும் வேலையின்போது அவை நழுவி விழுவதால் காயங்களும் ஏற்படும். அசைந்தபடி சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் கருவியோடு சேர்த்து பித்தளைத்துண்டுகளை தொடர்ந்து அழுத்திப்பிடித்தபடி இருக்கும் போது வெளிப்படும் தூசுகள் சுவாசத்தொற்றுக்களை உருவாக்கி மணிக்கட்டு எலும்பு பிரச்சனைகள்,  கழுத்தெலும்புத் தேய்மானப் பிரச்சனை, முதுகெலும்பு நிரந்தரமாக உருக்குலைதல் போன்றவற்றை உருவாகிவிடுகின்றன. பித்தளைப்பூட்டு உற்பத்தியில் பளபளப்பு ஏற்றுதல், மின்முலாம்புசுதல், வண்ணங்களைத் தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் சிறார்கள் தொழில் தொடர்புடைய ஆபத்துக்கள் பலவற்றை எதிர்கொள்கின்றனர். உலகளாவிய பொருள் வழங்கல் சங்கிலித் தொடரில் சிறார்கள் மிகப்பெருமளவில் இருக்கின்றனர் என்பதும் குழந்தைத்தொழில் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்சசியைதடுத்து கடுமையான பாதிப்புகளை உருவாக்குவதும் கவலை தரும் நிலைமைகளாகும்.  இத்தகைய உழைப்புச் சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தெளிலான ஒரு தேசியக்கொள்கையும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டதாக இருக்கும் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, கல்வி அறிவின்மை போன்றவற்றிற்கு எதிரான அரசின் நடவடிக்கையும் தேவைப்படுகின்றன.

அரசாங்க நடவடிக்கைகள்

இந்திய அரசாங்கம் குழந்தைத்தொழிலாளர் பிரச்சனையை உயிர்ப்புடன் சந்தித்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உள்ள பிரிவுகளும் பல்வேறு தொழிலாளர் சட்டக்கூறுகளும் குழந்தைகள் தொடர்பான பிற சட்டங்களும் அவற்றில் அவ்வப்போது செய்யப்படும் திருத்தங்களும் இதற்கு சான்றுகளாகத் திகழ்கின்றன. குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சட்டங்களை செயல்படுத்துவதற்கான வளங்களை வழங்குவதிலும், குழந்தை தொழிலாளர் தேசியக்கொள்கையின் நோக்கம், முன்னுரிமைகளை வகுப்பதிலும் இந்திய முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆபத்தான தொழில்களிலும் வழிமுறைகளிலும் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாகக் கொண்டு படிப்படியாக அடுத்தடுத்த அணுகுமுறைகளை இந்திய தேசியத்திட்டம் மேற்கொள்கிறது. பணி இடங்களில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்கான பல்வேறு திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கான ஒரு அதிரடிப்படையையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இலவசக்கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009 (RTE ACT) உருவாக்கப்பட்டு கல்வி பெறும் உரிமை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது. 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தைககும் இலவசக்கல்வி கட்டயமாகத் தரப்படவேண்டும். குழந்தைத் தொழிலாளர் கொள்கைகள் இத்தகைய நோக்கங்களை அடைந்திருப்பது, பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையும், அவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்திருப்பதிலிருந்து தெரிகிறது. குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 2001 இல் இருந்த 12.7 மில்லியன் என்ற அளவில் இருந்து 2011 இல் 10.1 மில்லியன் என்ற அளவுக்குக் குறைந்திருப்பதும் இதைக்காட்டுகிறது. இதே காலகட்டத்தில் நடத்தப்பட்ட தேசிய புள்ளிவிவரக்கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வு, உழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2004 – 05 இல் இருந்த 9.07 மில்லியனிலிருந்து 2009 – 10 இல் 4.98 மில்லியனாகக் குறைந்திருப்பதைக் காட்டுகிறது.

தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் அறிக்கை

குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு ஒழுங்குமுறை) சட்டம் 1986, 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை 18 வகையான தொழில்கள், 65 வகையான உற்பத்தி வழிமுறைகள் ஆகியவற்றில் ஈடுபடுத்துவதை முழுமையாகத் தடை செய்துள்ளது. 14 வயது முடிந்து 18 வயது முடியாத நிலையில் உள்ளவர்களை விலைப்பருவத்தினர் என்று இந்தச் சட்டம் வரையறை செய்கிறது. 18 வயதிற்கும் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் 1948 ஆம் ஆண்டின் தொழிற்சாலை சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சுரங்கம், வெடிப்பொருள், ஆபத்தான பிற தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபடுத்துவதை இந்தச் சட்டம் முற்றிலுமாகத் தடை செய்கிறது. இந்த சட்டத்திருத்தம் அமலான உடனேயே தற்போதைய பட்டியலில் காணப்படும் ஆபத்தான பணிகள், உற்பத்தி வழிமுறைகள் பற்றி மறுஆய்வு செய்வதற்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (TAC) அமைக்கப்பட்டு அதன் அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இதன் அறிக்கையின் பகுதி1 இல் குழந்தைத்தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாத ஆபத்தான பணிகளும் உற்பத்தி வழிமுறைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பகுதி 2 இல் குழந்தைகளை உதவிக்கு வைத்துக்கொள்ளக்கூடாத பணிகளும், உற்பத்தி வைத்துக்கொள்ளகூடாத பணிகளும் உற்பத்தி வழிமுறைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. பகுதி1 இல் 9 வகையான வேலைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. இவற்றில் குறிப்பாக பூமிக்கடியில் நடைபெறும் பணிகள் நீருக்கடியில் செய்யப்படும் வேலைகள், ஆபத்தான வழிமுறைகளைக் கொண்டிருக்கும் தொழிலகங்களின் பட்டியல் போன்றவையும் அடங்கும்.

இந்தப் பட்டியலில் காணப்படும் சில வகைப்பணிகளாவன :

இரும்பு சம்பந்தப்பட்ட, இரும்பு சம்பந்தம் இல்லாத உலோகத்தொழில்கள், பல்வேறு விதமான வேதித்தொழிற்சாலைகள், ஆற்றலை உற்பத்தி செய்யும் தொழிலகங்கள், சிமெண்ட் ரப்பர் பெட்ரோலியம் 3 வகை உரத்தொழிற்சாலைகள் மருந்து உற்பத்தி நிலையங்கள், காகிதக்கூழ், பெட்ரோகெமிக்கல், பெயிண்ட் நிறமித்தொழிலகங்கள், மின்முலாம் பூசுதல், தோல்பதப்படுத்துதல், நொதிக்கவைத்தல், கண்ணாடி மற்றும் பீங்கான் தொழில், இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடங்கள், கட்டுமானத் தொழில் போன்றவை இந்தப்பட்டியலில் அடங்கி உள்ளன.

குடும்பத் தொழில் நிறுவனங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துதல்

பள்ளி விடுமுறைக்காலங்களில் குடும்பத்தினருக்கு உதவுகதற்கும், குடும்பத் தொழில் நிறுவனங்களில் உதவிகள் செய்திடவும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடும்பம் என்பது தாய், தந்தை, உடன்பிறந்தோர் ஆகியோரைக் குறிக்கும். பள்ளிக்கூடம் பற்றிய வரையறையும் இங்கு கருதத்தக்கது. கல்வி உரிமைச்சட்டத்தில் (RTE) குறிப்பிடப்படும் வரையறைக்கு உட்பட்ட பள்ளிகளையே இது குறிக்கிறது.  குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக்கல்வித் திட்டம் 2009 இன் பட்டியலில் (பிரிவு 19 முதல் 25 வரை) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், தரம் ஆகியவற்றோடு இசைவுடைய பள்ளிகளையே இது குறிக்கிறது.  தொழில்களில் குழந்தைகள் தாமாக முன்வந்து உதவிட வேண்டுமே தவிர ஆபத்தான சூழ்நிலைகளில் அவர்களை வேலைக்கு வைப்பதாக இருத்தல் ஆகாது. சர்க்கஸ் தவிர விளம்பரம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள், பிறவகைப் பொழுதுபோக்குகள், விளையாட்டு தொடர்பான செயல்பாடுகள் போன்ற ஒலிஒளி பொழுதுபோக்குத் தொழில்களில் ஈடுபடும் குழந்தைக் கலைஞர்களுக்கு இத்தகைய நிபந்தனைகள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நடிப்பது, பாடுவது, விளையாடுவது போன்ற செயல்களைச் செய்யும் அல்லது பயிலும் குழந்தைகளே குழந்தைக் கலைஞர்களாகக் கருதப்படுவார்கள்.

தண்டனைகள்

குழந்தைத் தொழிலாளர் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுப்பு ஒழுங்குமுறை) சட்டம் 1986 கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. பிரிவு 3 அல்லது 3A இன் கீழ் இழைக்கப்படும் குற்றங்களுக்கு பணி வழங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை வழங்க வகை செய்கிறது. 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதமோ அல்லது அபராதம் சிறை தண்டனை இரண்டுமோ தரப்படலாம். மீண்டும் மீண்டும் குற்றம் இழைக்கும் பணி வழங்குவோர் ஒரு ஆண்டுக்குக் குறையாமல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறவேண்டி இருக்கும். பெற்றோரோ, பாதுகாவலரோ தங்கள் குழந்தைகளை பிரிவு 3 அல்லது 3A  முரணாக பணிபுரிய அனுமதித்தால் முதல் குற்றத்திற்கு தண்டனை கிடையாது. ஆனால் மறுபடியும் அதே குற்றம் இழைக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று CALPR  சட்டம் தெரிவிக்கிறது.

மறுவாழ்வு

பணி இடங்களில் இருந்து மீட்கப்படும் குழந்தைகளுக்கும் வளர் இளம் பருவத்தினருக்கும் CALPR சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி மறுவாழ்வு நிதி உருவாக்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும். இத்தகைய கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கு வழங்குமாறு அரசுகளுக்கு இந்த சட்டம் வழிகாட்டுகிறது, இந்தச் சட்டம் செயல்படுத்தப்படுவதை அரசுகள் அவ்வப்போது தணிக்கை செய்து கண்காணித்து வரவேண்டும்.

குழந்தைத்தொழிலாளர் சட்டத்திற்கான நோக்கம் 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து அவர்கள் தொடர்ந்து பயின்று வருவதை உறுதிசெய்வதன் அவசியத்தை உணர்ந்துள்ளது. இதனோடு கூடவே குழந்தைத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்படுவதும், மீட்கப்படுவதும் கல்வி பொருளாதார மறுவாழ்வு தரப்படுவதும் நடந்து வரவேண்டும். மீட்கப்படுவோருக்கு வேலை வாய்ப்பிற்கான திறன் பயிற்சிகளும், வருவாய்ப் பெருக்கத்திற்கான வழிகளும் கற்றுத்தரப்படவேண்டும்.  புலம் பெயர்ந்து வருவோர், எளிதில் பாதிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கு சிறப்பு கவனம் தரப்படவேண்டும். விழிப்புணர்வு உருவாக்கம், பயிற்சி, திறன் உருவாக்கம், அரசையும் அரசுசார அமைப்புகளையும் இதுபற்றி உணரச்செய்து சமூக மாற்றம் காண முயலுதல் போன்றவை குழந்தைதொழிலாளர் சட்டங்கள் சிறப்புற செயல்பட்டு இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களே இல்லாத நிலை உருவாகப் பெரிதும் உதவும்.

ஆசிரியர் : ஹெலன் ஆர். சேகர்

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate