குடும்பச் சொத்து – சட்டம்
பாகப்பிரிவினை
- ”தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதாவது, குடும்பச்சொத்து உடன்படிக்கைபத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும். பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப் படாத பட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப் பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
- ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.
தான பத்திரம்
- சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.
- ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.
- ஆனால், தானபத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.
உயில் (இது விருப்ப ஆவணம்)
- சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.
- தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாயமில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.
- மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பெண்களுக்கான சொத்துரிமை
- பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
- 2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தின்படி, பெண்கள் தனது தந்தையின் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோரமுடியும். மேலும், 25.3.1989-க்குமுன்பு திருமணம்செய்து கொண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பிரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.
வாரிசுச் சான்றிதழ்
- வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.
- பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.
- முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”
- பொதுவாக, சொத்து பாகப் பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஆதாரம் : லாயர்ஸ் லைன் மாத இதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/18/2020
0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments
நட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.