অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்

  • அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல்
  • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல்
  • எந்த ஒரு குடிமகனுக்கும் பதிலளிக்கும் கடமை அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை உணரச் செய்தல்
  • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவலைப்பெற விரும்பும் குடிமக்களுக்கு அதைக் கொடுக்க வழிவகை செய்வதோடு லஞ்ச-ஊழலைத் தடுத்தல்.

தகவல் உரிமை என்றால் என்ன?

தகவல் உரிமை என்பது இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் கையிலோ அல்லது கட்டுப்பாட்டிலோ உள்ள தகவலைத் தெரிந்து கொள்ளும் மற்றும் தகவலைப் பெறும் உரிமையை குறிக்கும்.

  • அரசு அலுவலகத்திலுள்ள பணி ஆவணங்கள், பதிவேடுகளை மேலாய்வு செய்வதற்கு
  • ஆவணங்கள் அல்லது பதிவேடுகளின் குறிப்புகளை எடுத்தல், சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுதல்
  • பொருட்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல். (எ.கா. – அரசு கட்டிடம் கட்டும் போது சிமெண்ட் கலவை மாதிரிகளைப் பெறுதல்)

இப்படிப்பட்ட தகவலைக் கணினியில் அல்லது வேறு சாதனம் எதிலும் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கும்பொழுது, அதனை குறுந்தகடுகள், ஒலி நாடாக்கள், ஒலி-ஒளிக்காட்சி நாடாப் பேழைகள், மின்னஞ்சல் அச்செடுப்புகள் அல்லது எந்த வடிவிலும் தகவலைப்பெறும் உரிமையும் இதில் அடங்கும். (எ.கா) ரேஷன் கடையில் எத்தனை குடும்ப அட்டைக்கு ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதைக் கேட்பது தகவல் உரிமை.

தகவல் உரிமை எதற்காக?

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் விதி 19(1) பகுதியின் கீழ் தகவல் என்பது மக்களின் அடிப்படை உரிமையின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் வெளிப்படையான மற்றும் பொறுப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு.

ஊழல் செய்பவர்களை அம்பலப்படுத்தவும் லஞ்சம் இல்லாமல் சேவையைப் பெறுவதற்கும் குடிமக்களுக்கு உதவுகிறது.

ரகசியக் காப்புச் சட்டம் 1923 அரசின் செயல்பாடுகளை மூடி மறைக்கின்றது. இதை மாற்றி மக்கள் பங்கேற்பை உறுதி செய்து மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்கப் பயன்படுகிறது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான குறிக்கோள்களான சமத்துவம், சமூகநீதி, பாகுபடுத்தாமை, இறையாண்மை, வாழ்க்கைக்கான உரிமை, சுதந்திரம் போன்ற அம்சங்களை நிறைவேற்ற தகவல் உரிமை அவசியமாகிறது.

என்னென்ன தகவல் கேட்கலாம்?

நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.

அரசுத் துறைகள் தங்களுக்கு வந்த விண்ணப்பங்களுக்கு எத்தனை நாட்களுக்குள் சான்று கொடுக்க வேண்டும். அதற்கான கட்டணம் எவ்வளவு, செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய மக்கள் சாசன நகல்களைக் கேட்கலாம்.

அரசு ஆணைகள், அறிவுரைகள், சுற்றறிக்கைகள், வரைபடங்கள், படிவங்கள், விதிமுறைகள், நமக்கோ வேறு யாருக்கோ, உரிமம், அனுமதி, கடன், அரசு சலுகைகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டவற்றிற்கு (அ) மறுக்கப்பட்டமைக்கு ஆவண நகல்கள் மற்றும் தகவல்.

அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு அளித்த நிதியிலிருந்து செய்யப்பட்ட செலவுகளின் செலவுச் சீட்டுகள், மருத்துவமனைகளில் மருந்துகள், எக்ஸ்ரே படங்கள் போன்றவற்றின் இருப்பு, மருத்துவர்கள் இருப்பிடம், பணி நேரம் பற்றிய விவரங்கள்.

கணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் வாங்கிய விவரங்கள்.

வீட்டு வரி விதிப்பின் விதிமுறைகள், சாலை, பாலம், பிற கட்டிடங்கள், தெரு விளக்குகள், குழாய்கள், கிணறுகள் ஆகியவை எப்போது? எப்படி? யாரால்? எவ்வளவு நீளம் – அகலம்- பருமன் தன்மையில் அமைக்கப்பட்டது போன்ற விவரங்கள்.

கிராம சிட்டா அடங்கல் ‘அ’ பதிவேடு, நிலங்கள், கிராமத்தின் வரைபடம், சாகுபடிக் கணக்கு, நகராட்சியிலும், மாநகராட்சியிலும், கிராமத்திலும் – புறம்போக்கு நிலங்கள், மரங்கள், ஆக்கிரமிப்புகள், ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள், நீளம், அகலம், ஆழம், விஸ்தீரணம், பட்டா மாற்றம், பட்டாபிரிப்பு, நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தியது, கையகப்படுத்தப்போவது, அளிக்கப்பட்ட வீட்டுமனைப்பட்டா அந்த மக்களுக்கு உண்மையில் போய் சேர்ந்ததற்கான ஒப்புதல் சீட்டுகள், இன்றைய நிலையில் அவர்களுக்கு அளித்த அந்த மனை உள்ளதா? அதில் கட்டிடம் கட்டியது ஆகிய விவரங்கள்.

சாதிச்சான்று பெறும் முறைகள், பெறத் தேவையானவைகள், போலியான சாதிச்சான்றுகளைப் பெற்ற விவரங்கள், அதன் விசாரணை ஏடுகள் என பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை அனைத்தையும் கேட்கலாம்.

தகவல் கொடுக்க வேண்டியவர்கள்?

பொது அதிகார அமைப்பு: அதாவது அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், வங்கிகள், வாரியங்கள் மற்றும் பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட உரிய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்.

அரசுக்கு சொந்தமான கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மற்றும் அரசால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கணிசமாக நிதி வழங்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்களும் ஆகும்

என்னென்ன முறையில் தகவல் பெறலாம்

  • மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசின் பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து ஆவணங்கள், மற்றும் பதிவேடுகளைப் பெறலாம், பார்வையிடலாம்.
  • குறிப்பெடுக்கலாம், பக்கங்களை நகலெடுக்கலாம், ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளின் சான்றிட்ட நகல்களைப் பெறலாம்.
  • சான்றிட்ட பொருள் மாதிரிகள், உருவமாதிரிகள் பெற்றிடலாம்.
  • சி.டி., ஃப்ளாப்பிகள், டேப்புகள், வீடியோ கேசட்டுகள் அல்லது வேறு வகையான மின்னணு வழிகளில் பெறலாம், அல்லது அத்தகு மின்னணு சாதனங்களில் இருந்து அச்சு எடுத்திடலாம்.

தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள்

தகவல் பெறுவதற்காக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பொதுமக்களுக்கு குறைந்தபட்ச வழி அமைத்துத்தரும் பொருட்டு, இணையம் உள்ளிட்ட பல்வேறு தகவல் வழியாகவும், முறையான கால இடைவெளிகளில் ஒவ்வொரு அரசு அலுவலகமும் தாமாகவே முன்வந்து தகவல் வழங்க வேண்டும் ( த.பெ.உ..சட்டம் 4(2)).

ஒவ்வொரு தகவலும் விரிவான முறையில் தரப்படவேண்டும். பொதுமக்கள் எளிதில் அணுகிப் பெறக்கூடிய வடிவிலும், முறையிலும், தகவல் இருக்கும்படி செய்ய வேண்டும் (த.பெ.உ.சட்டம் 4(3))

கணினிப்படுத்துவதற்குப் பொருத்தமான எல்லாப் பதிவேடுகளையும் கிடைக்கக்கூடிய வள வாய்ப்புகளுக்கு உட்பட்டு நியாயமான காலத்திற்குள் கணினிப்படுத்தவேண்டும்.

இத்தகைய பதிவேடுகளை எளிதில் அணுகிப் பெறக்கூடியவாறு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

செலவுச் சிக்கனம், உள்ளூர் வழிமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எல்லா விவரப் பொருள்களும் பரப்பப்படவேண்டும். பரப்புதல் என்பது அறிவிப்புப் பலகைகள், செய்தியேடுகள், பொது அறிவிப்புகள், ஊடகப் பரப்பல்கள், இணையம் அல்லது வேறு எந்த வழியிலும் தகவல் அறியத்தருதல் அல்லது பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்தல் என்பதைக் குறிக்கும்.

தகவலை யாரெல்லாம் கேட்கலாம்?

இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் தகவலைக் கேட்டுப்பெறலாம். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து வயதினரும் கேட்கலாம். (பிரிவு–3) வெளிநாட்டினர் இச்சட்டப்படி தகவல் கேட்க முடியாது.

தகவல் கேட்கும்போது அதிகாரிகளிடம் அதற்கான காரணம் சொல்லத் தேவையில்லை. அதிகாரிகளும் மனுதாரரிடம் காரணம் கேட்கக்கூடாது (பிரிவு6(2)).

யாரிடம் கேட்கலாம்?

ஒவ்வொரு அரசுத்துறை அலுவலகத்திலும் ஒரு “பொதுத் தகவல் அலுவலர்” ஒரு மேல் முறையீட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் கோருபவர் – பொதுத் தகவல் அலுவலரிடம் மனு செய்யலாம்.

விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும்?

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள துணை பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத் தகவல் அலுவலர் – விண்ணப்பங்களை நிரப்புவதற்கும், மேல்முறையீடுகளை செய்வதற்கும் மனுதாரருக்கு உதவி செய்ய வேண்டும். வாய்மொழி விண்ணப்பங்களை எழுத்து வடிவில் மாற்றவும் இரு அதிகாரிகளும் உதவி செய்ய வேண்டும். உடல் ஊனமுற்ற்வர்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்து தர வேண்டும்.

தமிழிலேயே விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசுத்துறை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தமிழிலேயே விண்ணப்பிக்கலாம். அதற்கு பொதுத் தகவல் அலுவலர் தமிழிலேயே பதில் தர வேண்டும். டெல்லியிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு தமிழிலும் விண்ணப்பம் அனுப்பலாம். ஆனால் டெல்லிக்கு ஆங்கிலத்தில் அனுப்புவது நல்லது.

தபாலில் அனுப்பும் முறை

விண்ணப்பங்களை சாதாரண தபாலிலேயே அனுப்பலாம். ஆனால், பதிவுத் தபாலில் அனுப்புவதே நல்லது. அப்போது அதிகாரிகள் விண்ணப்பம் வரவில்லை என ஏமாற்ற வாய்ப்பிருக்காது.

அஞசல் உறை மீது விலாசம் எழுதும்போது, அனுப்பப்படும் அதிகாரியின் பதவியின் பெயர், அவரது அலுவலகத்தின் பெயர், முகவரி மட்டும் எழுதினால் போதும். அவ்வாறு அனுப்பும்போது அதிகாரிகளால் மனுவை திருப்பி அனுப்ப முடியாது.

நீங்கள் மனுக்கள் அனுப்பியதற்கு சான்று இருந்தால் மட்டும் போதாது. சம்மந்தப்பட்ட அலுவலர் அதைப் பெற்றுக்கொண்டார் என்பதற்கான ஒப்புதல் சீட்டே முக்கிய ஆதாரமாகும். அது இல்லை என்றால் மேல் முறையீடுகள் எடுபடாமல் போக வாய்ப்புண்டு.

முகவரிகள் தெரியவில்லையா?

நாம் அரசிடம் எது பற்றி விண்ணப்பித்தாலும் 30 நாட்களுக்குள் விசாரணை செய்து மனுதாரருக்கு உரிய தகவலைத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் 20.08.08 தேதியிட்ட (அரசாணை எண் 114) சொல்கிறது. அதன்படி நாம் கொடுத்த மனுவிற்கு பதில் தரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பற்றிய காரணங்களைக் கேட்கலாம். அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பரிந்துரைத்த அதிகாரியின் அறிக்கை நகல், வாக்குமூலங்களின் நகல்களைக் கேட்கலாம்.

மாநில அரசு : நீங்கள் தகவல் பெறும் உரிமைச்சட்ட்த்தில் மாநில அரசு அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும்போது எந்த அலுவலகத்துக்கு அனுப்புவது என்று தெரியவில்லையா? அதற்காக கவலைப்பட வேண்டாம். தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்புங்கள். அங்குள்ள அதிகாரி அவருக்கு சம்மந்தப்பட்டதல்ல என்றால் பிரிவு 6 (3)ன் படி உரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுப்பிய தகவல் உங்களுக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு : அதேபோல் முகவரி தெரிந்தால் மத்திய அரசு அலுவலகங்களுக்கு நேரிடையாக அனுப்பலாம். சம்மந்தப்பட்ட அலுவலகம் எது என்று தெரியாவிட்டால் மட்டும் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்.

பெறுநர் :

மத்திய பொது தகவல் அலுவலர் அவர்கள்,

தகவல் பெறும் உரிமை சட்டம் – 2005,

ஊர் ................................. பின்கோடு ......................

மேற்படி காலியாக உள்ள இடத்தில் உங்கள் ஊருக்கு சம்மந்தப்பட்ட தலைமை அஞ்சல் அலுவலகம் இருக்கும் ஊரின் பெயரை தங்கள் பகுதி தபால்காரரிடம் கேட்டு எழுதி விடுங்கள்.

மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பக்கட்டணம் செலுத்தி ரசீது பெற்றும் அனுப்பலாம். தபால் செலவு இல்லை.

மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் முதல் மேல்முறையீட்டு முகவரி தெரியாவிட்டால் உங்கள் விண்ணப்பத்தில்

பெறுநர் :

மத்திய பொதுத் தகவல் அலுவலர் மற்றும்

மேல் முறையீட்டு அலுவலர்,

தகவல் பெறும்உரிமைச்சட்டம் – 2005

அஞ்சலகங்களின் இயக்குனர்

சென்னை / கோவை / திருச்சி / மதுரை

(நான்கில் பொருந்தும் ஊர் பெயர் மட்டும் குறிப்பிட வேண்டும்) உறை மீதும் இதே விலாசம்தான் எழுதி அனுப்ப வேண்டும்.

இரண்டாவது மேல் முறையீடு : டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.

To

CENTRAL INFORMATION COMMISSION,

IInd floor, August Kranti Bhavan,

Bhikaji Cama Place, New Delhi – 110 066.

Phone No . 011-2616 1137 Fax : 01126186536 www.cic.gov.in

அஞ்சல் உறை மீது இதே விலாசத்தை எழுதவும்.

தவறான முகவரிக்கு அனுப்பினால்...

அனுப்பிய மனுதாரரின் விண்ணப்பத்தில் கேட்ட கேள்விகளுக்கு தகவல் தன்னிடம் இல்லை என்றால், மனுதாரருக்கு மனுவைத் திருப்பி அனுப்பக்கூடாது. அவரே அந்த மனுவினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரிக்கு 5 நாட்களுக்குள்ளாக அனுப்பிவிட்டு, அவ்வாறு அனுப்பிய தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.(பிரிவு 6(3)).

தகவல் பெறக் கட்டணம்

மத்திய அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10. மாநில அரசு அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.10, தகவல் கொடுக்க, நகல் எடுக்க- 1 பக்கத்திற்கு ரூ.2, ஆவணத்தை நேரில் பார்வையிட முதல் ஒரு மணி நேரம் இலவசம். அடுத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.5, பொருள் மாதிரி/உருவ மாதிரிக்கும் அசல் கட்டணம். CD, FLOPPY ஒன்றுக்கு ரூ.50 (G.O.M.S.NO.1012 / PUBLIC (ESH.1 & LEG) DEPT. DT.20.09.2006.

கட்டணம் செலுத்தும் முறை

மாநிலஅரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை நீதிமன்ற வில்லை ( Court Fee Stamp ) ரூ.10க்கு ஒட்டலாம் (அல்லது பொது தகவல் அலுவலர்............................ அலுவலகம் என்ற பெயரில் ரூ.10 வங்கி வரைவோலை (டி.டி) பெற்று அனுப்பலாம். அல்லது கீழ்க்காணும் தலைப்பில் அரசு கருவூலத்தில் ரூ.10 செலுத்தலாம்.

0075.00 Miscellaneous General Services – 800 Other Receipts BK collection of Fees Under Tamilnadu Right To Information (Fees) Comission Rules – 2005 (DPC00 75 0 00 BK 0006)

மத்திய அரசு தொடர்பான அலுவலகங்களுக்குக் கட்டணம் செலுத்தும் முறை

ரூ.10க்கு டி.டி. அல்லது போஸ்டல் ஆர்டர் மட்டுமே கீழ்கண்ட தலைப்பில் எடுத்து அனுப்ப வேண்டும். (பேங்க், இரயில்வே, தபால்நிலையம், பாஸ்போர்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல்., பாராளுமன்றம் போன்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு)

கணவன், மனைவி பணிப் பதிவேடுகளின் நாமினி விவரங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த விவரங்கள், குற்றப்பத்திரிகைகள், தண்டனைக்கோப்புகள், சம்பளப்பட்டியல் விவரங்கள், வாக்குமூல நகல்கள், அசையும், அசையா சொத்துகள் வாங்கிய விவரங்கள்.

Accounts Officer,

Office Of The………………………………………………………………..

ரயில்வே துறைக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தும் முறை

ரயில்வே துறைக்கு தகவல்களை பெறுவதற்கான கட்டணம் ரூ.10-ஐ போஸ்டல் ஆர்டராகவோ அல்லது ஏதேனும் ஒரு ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்று விண்ணப்பித்துடன் இணைத்தும் அனுப்பலாம்.

ரொக்கமாகவும் செலுத்தலாம்

மனுதாரர் சம்மந்தப்பட்ட துறைக்கே நேரில் சென்று ரொக்கமாக கட்டணம் செலுத்தலாம். செலுத்தியபின் ரசீது பெற்றுக் கொள்வது முக்கியம்.

கட்டணச்சலுகை யாருக்கு?

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவரானால் அதற்கான சான்று நகல் இணைத்தால் போதும். விண்ணப்பம் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும். (குறைந்த வருமானம் உடையோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வதற்கான சான்றினை வட்டாட்சியரிடம் பெறலாம்)

எத்தனை தகவல் கேட்கலாம்?

ஒருவர், ஒரே விண்ணப்பத்தில் எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். (அதிகபட்சமாக 10 முதல் 15 கேள்விகளுக்குள் கேட்பது நல்லது)

மூன்றாம் நபர் என்பவர் யார்?

விண்ணப்பிப்போர், தகவல் தரும் அலுவலகம் இரண்டிற்கும் அப்பாற்பட்ட தகவலுக்குட்பட்ட நபர் மூன்றாம் நபர் எனப்படுவார்.

இந்த மூன்றாம் நபரால் ரகசியமாக பாவிக்கப்பட்டு, ரகசியமாக பாவிக்கப்படுவதற்காக அளிக்கப்பட்ட ஆவணம், பதிவேடு, தகவல் ஆகியவை மூன்றாம் நபர் சார்ந்த தகவல் எனப்படும்.

மூன்றாம் நபர் குறித்த தகவல்கள்

மூன்றாம் நபர் பற்றிய ரகசிய ஆவணங்கள் தவிர மற்றவற்றைத் தரலாம். நமக்கு தரும் முன் அந்த மூன்றாம் நபருக்கு 5 நாட்களுக்குள் அறிவிப்பு தரவேண்டும். அந்த மூன்றாம் நபர் 10 தினங்களுக்குள் பதில் தர வேண்டும். ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பைத் தராத தகவலை மனு செய்த 40 தினங்களுக்குள் அளித்தல் வேண்டும்.

தகவல் பெறுவதற்கான கால அவகாசம்

தகவல் தர (அ) நிராகரிக்க (பிரிவு 7 (1))....................................... 30 நாட்கள்

சம்பந்தமில்லா துறைக்கு அனுப்ப்ப்பட்ட மனுவை சரியான துறைக்கு

அனுப்ப தேவைப்படும் கூடுதல் நாட்கள் (பிரிவு 6(3) )....................... 05 நாட்கள்

மூன்றாம் நபர் பற்றிய தகவலுக்கு கடிதம் எழுத பிரிவு 11(1)............ 05 நாட்கள்

மூன்றாம் நபர் பதில் அளிக்க (பிரிவு 11 (2) ).............................. 10 நாட்கள்

மூன்றாம் நபர் பற்றிய தகவல் அளிக்க (பிரிவு 11 (3) )........................... 40 நாட்கள்

குறைபாடுடைய பதில் (அ) மனுவிற்கு, முதல் மேல் முறையீடு

செய்ய ( பிரிவு 19 (1) ) ............................................................................ 30 நாட்கள்

இரண்டாம் முறையீடு (ஆணையத்திற்கு) செய்ய ( பிரிவு 19 (3) )...... 30 நாட்கள்

48 மணி நேரத்தில் கொடுக்க வேண்டிய தகவல்

கேட்கப்படும் தகவல் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பானதாக இருப்பின், விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படவேண்டும்.

மனு எழுதும் முறை

இதற்கென்று தனியாக விண்ணப்பப் படிவம் ஏதும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் கையால் மனு எழுதியோ அல்லது டைப் செய்தோ அனுப்பினால் போதும். தமிழிலேயே மனு எழுதலாம். ஆங்கிலம் (அ) இந்தி (அ) அந்தந்த மாநில மொழியிலும் மனு எழுதலாம்.

மாதிரி விண்ணப்பங்கள்

ரேசன் கார்டு தொடர்பான மாதிரி விண்ணப்பம்

பட்டா தொடர்பான மாதிரி விண்ணப்பம்

பஞ்சாயத்தில் நடைபெறும் ஊழலை வெளிக்கொண்டுவர மாதிரி விண்ணப்பம்

எப்போது மறுக்கப்படுவதாக அர்த்தம்

விண்ணப்பம் பொது தகவல் அலுவலருக்கு கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கப்படாமல், எவ்வித செயல்பாடும் இல்லையெனில் – தகவல் மறுக்கப்பட்டதாக அர்த்தம்.

முதல் மேல் முறையீடு

30 நாட்களுக்குள் பதில் கொடுக்கப்படவில்லை எனில், அதே துறையின் மேல் முறையீட்டு அலுவலருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும். இதற்கு கட்டணம் இல்லை பிரிவு – 19 (1) மேல்முறையீடு செய்யும்போது ஏற்கெனவே நாம் விண்ணப்பித்த மனுவின் நகலை இணைக்க வேண்டும்.

பதிலில் திருப்தி இல்லை என்றால்?

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதில் கொடுத்துவிட்டார்கள். கொடுத்த பதிலில் உண்மை இல்லை. திருப்தி இல்லை என்று நினைத்தால், அதே துறையின் மேல்முறையீட்டு அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். அப்படி செய்யும்போது மேல்முறையீட்டு மனுவுடன் முதலில் விண்ணப்பித்த மனுவின் நகலையும், பொது தகவல் அலுவலர் கொடுத்த பதில் கடிதத்தின் நகலையும் இணைக்க வேண்டும். இவ்வாறு மேல்முறையீடு செய்வதற்கும் கட்டணம் இல்லை.

இரண்டாவது மேல் முறையீடு

முதல் மேல் முறையீடு அனுப்பிய 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கவில்லை என்றாலும், கொடுத்த தகவலில் உண்மை இல்லை, திருப்தி இல்லை என்று நினைத்தாலும் தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு மேல்முறையீடு செய்யும்போது முதலில் பொது தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவின் நகல், முதல் மேல்முறையீடு செய்த மனுவின் நகல், திருப்தி இல்லா பதில் கடிதத்தின் நகல், முதல் மேல்முறையீடு செய்த மனுவின் நகல், ஆகிய அனைத்து ஆவணங்களுடன் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதற்கும் கட்டணம் இல்லை. பிரிவு – 19(3).

மனுவை நிராகரித்தாலும் காரணம் சொல்ல வேண்டும்

மனுதாரரின் விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கட்டணம் பெற்றுக்கொண்டு அந்த தகவலை அளிக்க வேண்டும். மனுவை நிராகரித்தாலும் பிரிவுகள் 8.9ன்படி அதற்கான காரணங்களை மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும். அத்தகைய நிராகரிப்பிற்கு எதிராக மனுதாரர் எவ்வளவு கால அளவிற்குள், யாரிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற விபரங்களையும் தெரிவித்தல் வேண்டும்.

30 நாட்களுக்கு பிறகு கொடுக்கப்படும் தகவலுக்கு கட்டணம் இல்லை

30 நாட்களுக்கு பிறகு செய்யப்படும் இரண்டு மேல் முறையீடுகளுக்கும், நினைவூட்டல் களுக்கும் கட்டணம் ஏதும் இல்லை. (பிரிவு 18), 30 நாட்களுக்குள் தகவல் தரப்படவில்லையெனில், அதன் பிறகு கொடுக்கப்படும் எந்தத் தகவல்களுக்கும் ஆவணங்களுக்கும் (ஒரு பக்கத்திற்கான ரூ.2, CD, Floppy- க்கான ரூ.50 ) கட்டணம் செலுத்த தேவையில்லை (பிரிவு 7 (6) ).

அதிகாரிக்கு அபராதங்கள் - தண்டனைகள்

பொது தகவல் அதிகாரி தவறு செய்ததாகக் கண்டறியப்பட்டாலோ அல்லது வேண்டும் என்றே தகவல் கொடுக்காமல் இருந்தாலோ, தவறான தகவல் கொடுத்தாலோ நாளொன்றுக்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பொது தகவல் அதிகாரிக்கு தகவல் ஆணையம் அபராதம் விதிக்கலாம். இந்த அபராதத் தொகை சம்பந்தப்பட்ட அலுவலரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படுகிறது.

தகவல் ஆணையம் தகவல் தராத பொது தகவல் அதிகாரியின் மீது, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆணையிடலாம் (பிரிவு 20 (1)).

அதிகாரி அபராதம் கட்டினாலும் சரியான தகவல் கொடுக்க வேண்டும்

விண்ணப்பம் பொது தகவல் அலுவலருக்கு கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் கொடுக்கப்படாமல், எவ்வித செயல்பாடும் இல்லையெனில் – தகவல் மறுக்கப்பட்டதாக அர்த்தம்.

முதல் மேல் முறையீடு

பொது தகவல் அதிகாரி அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் அபராதம் கட்டினாலும், அதன்பின்பும் சரியான தகவலை மனுதாரருக்கு கொடுத்தாக வேண்டும்.

மனுதாரருக்கு நஷ்டஈடு உண்டு

மனுதாரருக்கு தகவல் கொடுக்கப்படாததால் உண்மையிலேயே அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் ஆணையம் கருதுமேயானால், சம்மந்தப்பட்ட அதிகாரி மனுதாரருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என ஆணையம் தீர்ப்பளிக்கலாம்.

மனுதாரர் மீது வழக்கு தொடர முடியாது

இந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்காகவும் மனுதாரரின் மீது சிவில் அல்லது கிரிமினல் அல்லது வேறு சட்ட நடவடிக்கை எதுவுமே எடுக்க முடியாது

20 ஆண்டுக்கு மேல் உள்ள தகவலையும் கோரலாம்

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரிவு 8(1) (a) (c-1)க்கு உட்பட்டு மனுதாரர் கூறினால் அந்த தகவல் கொடுக்கப்படவேண்டும் பிரிவு 8 (3).

மாநில தகவல் ஆணையம்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 15ன்படி தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு அவ்வாணையம், மாநில தலைமைத் தகவல் ஆணையர் ஒருவர், மாநில தகவல் ஆணையர்கள் இருவர் ஆகியோரின் கீழ் 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. தற்போது 1.1.2013 அன்றைய தேதிபடி தலைமை தகவல் ஆணையருடன் சேர்த்து மொத்தம் 7 தகவல் ஆணையர்கள் மாநில தகவல் ஆணையத்தில் உள்ளனர். மத்திய தகவல் ஆணையம் 8 ஆணையர்களுடன் தற்போது செயல்பட்டுவருகிறது.

ஆணையத்திற்கு நீதிமன்ற அதிகாரம்:

மேல்முறையீடு அல்லது புகார் ஆகியவற்றை விசாரிக்கும்போது உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அனைத்து அதிகாரங்களும் ஆணையத்திற்கும் உண்டு. மேலும் தண்டனை விதிக்கவும் கட்டளைகள் பிறப்பிக்கவும் அதிகாரம் உண்டு (பிரிவு 20 (1) (2) ).

விலக்களிக்கப்பட்ட துறைகள் (பிரிவு – 8)

காவல் துறையில் விலக்களிக்கப்பட்டப் பிரிவுகள்:

தமிழகத்தில் பின்வரும் அரசுத் துறைப்பிரிவுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் தகவல் கோர முடியாது.

1. தனிப்பிரிவு – குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி 2. கியூ பிரிவு – குற்றப்புலனாய்வுத் துறை சி.ஐ.டி., 3. தனிப்பிரிவு 4. பாதுகாப்புப் பிரிவு 5. கோர்செல் சி.ஐ.டி. 6. சுருக்கெழுத்து அமைவனம் 7. மாவட்டத்தனிப்பிரிவுகள் 8. காவல் துறை ஆணையரக புலனாய்வுப்பிரிவுகள் 9. தனிப்புலனாய்வு செல்கள்

ஆதாரம் : சட்ட பஞ்சாயத்து இயக்கம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/12/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate